
வழக்கறிஞர்கள் தினமும் ஒரு திருக்குறளைக் கூறி அதற்கான விளக்கத்தையும் அளிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஒவ்வொரு தமிழனும் திருக்குறளைக் கண்டிப்பாக மனப்பாடமாக படித்து வைத்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். இந்த விஷயத்தில் வழக்கறிஞர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
எனவே, ஒவ்வொரு நாளும் ஒரு வழக்கறிஞரை நான் தேர்வு செய்கிறேன். அவர் தினமும் மதியம் அல்லது மாலை வேளையில் ஒரு திருக்குறளைக் கூறி அதற்கான விளக்கத்தையும் அளிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
இதற்கு தமிழ் ஆர்வலர்கள் பலர் வரவேற்பு அளித்ததோடு, நீதிபதிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு முதன்மைத் தேர்வு பாடத்திட்டத்திலும் திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது வரவேற்பைப் பெற்றது. உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியது என்று தமிழ் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.