Enable Javscript for better performance
ராகுலே அறிவித்து விட்டார்; இனி சந்தேகம் வேண்டாம்: ஸ்டாலின் பேச்சு- Dinamani

சுடச்சுட

  

  ராகுலே அறிவித்து விட்டார்; இனி சந்தேகம் வேண்டாம்: ஸ்டாலின் பேச்சு 

  By DIN  |   Published on : 12th April 2019 11:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  MKS_11-04_(2)

   

  புதுச்சேரி: புதுவை தனி மாநில அந்தஸ்து குறித்து ராகுல் காந்தியே அறிவித்து விட்டார். இனி யாருக்கும் சந்தேகம் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், வியாழனன்று புதுச்சேரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அதன் விவரம் பின்வருமாறு:

  வருகின்ற 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலில், இந்த புதுவை நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் அங்கீகாரம் பெற்றிருக்கக்கூடிய வேட்பாளராக, திரு. வைத்திலிங்கம் அவர்கள் உங்களிடத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கின்றார். அவருக்கு நீங்கள் கை சின்னத்தில் ஆதரவு தந்து சிறப்பானதொரு வெற்றியைத் தேடித் தந்திட வேண்டும். அதேபோல் தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடிய தி.மு.கழகத்தின் அங்கீகாரம் பெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் வெங்கடேசன் அவர்களுக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து சிறப்பானதொரு வெற்றியை தேடித் தந்திட வேண்டும் என்று கேட்க வந்திருக்கிறேன்.

  புதுவை மாநிலத்தின் முதல்வராக இருக்கக்கூடிய, திரு.நாராயணசாமி அவர்கள் மறைந்த நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுக்கு பல சிறப்புகளை இந்த மாநிலத்தின் முதல்வர் என்கின்ற முறையில் அறிவித்திருக்கின்றார்.

  அவர்களுக்கு நான் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தி.மு.கழகத்தின் தலைவராக இருந்து மட்டுமல்ல, தலைவர் கலைஞர் அவர்களின் மகனாகவும் இருந்து இந்த நேரத்தில் நான் நன்றியை சொல்ல விரும்புகின்றேன்.

  இன்றைக்கு நாடாளுமன்றத்தை பொறுத்த வரையில் நம்முடைய வைத்திலிங்கம் அவர்களை எதிர்த்து நிற்கக்கூடிய வேட்பாளர் யார் என்றால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர். அதே, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய ரங்கசாமி அவர்களைப் பற்றி, தமிழகத்தில் முதலமைச்சராக இருந்து மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் என்ன சொல்லி இருக்கின்றார் என்று தெரியுமா? கூட்டணி தர்மத்தை குழிதோண்டிப் புதைத்தவர் ரங்கசாமி. கூட்டணி தர்மத்தை மட்டுமல்ல இந்த மாநிலத்தையே குழி தோண்டி புதைத்தவர் ரங்கசாமி அவர்கள். இதை நான் சொல்லவில்லை, அம்மையார் ஜெயலலிதா அவர்கள் சான்றிதழ் கொடுத்து இருக்கின்றார். நம்பிக்கை துரோகம் செய்வது ரங்கசாமிக்கு கை வந்த கலை. அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல புதுவையில் இருக்கக்கூடிய மக்களுக்கும் துரோகம் செய்தவர் ரங்கசாமி. இதைமட்டும் ஜெயலலிதா அவர்கள் சொல்லவில்லை, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது என்பது தற்கொலைக்கு சமம் என்று சொன்னார்கள்.

  இப்படி ஜெயலலிதா அவர்களுக்கு விரோதமாக இருப்பவர்களோடு அ.தி.மு.க கூட்டணி வைத்திருக்கின்றது. அதேகூட்டணி இங்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கின்றது. இந்த உண்மைகளை நீங்கள் தயவு செய்து தெரிந்து கொண்டாக வேண்டும். தமிழகத்தைப் பொறுத்த வரையில் நான் அதிகம் பேச வேண்டிய அவசியமில்லை.

  பி.ஜே.பி தேர்தல் அறிக்கையை மோடி அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டு இருக்கின்றார்கள். அப்படி வெளியிட்ட நேரத்தில் அந்த அறிக்கையில் நாங்கள் 5 வருடத்திற்கு முன்பு தேர்தலில் நின்ற இடத்தில் இந்த உறுதிமொழிகளை தந்தோம், இந்த 5 வருடத்தில் இவ்வளவு சாதனைகளை செய்து இருக்கின்றோம் என்று தேர்தல் அறிக்கையில் எடுத்துச் சொல்லி இருக்கின்றார்களா? இந்த உறுதிமொழிகள் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று விளக்கமாக குறிப்பிட்டு காட்டி இருக்கின்றார்களா? எதுவும் கிடையாது. ஆனால், நான் இன்னும் கேட்கின்றேன். மாநில உரிமைகள் பறி போய்க்கொண்டிருக்கின்றது. அப்படி பறிபோய்க் கொண்டிருக்கின்ற அந்த உரிமைகளை காப்பாற்றுவோம். மாநில உரிமைகளைப் பெற்றுத் தருவோம் என்று சொல்லி இருக்கின்றார்களா? கிடையாது. நீட் தேர்வு பற்றி ஒரு வார்த்தை அதில் இடம் பெற்றிருக்கின்றதா?

  வேலை வாய்ப்புப் பற்றி ஏதேனும் ஒரு பெயருக்காக ஒப்புக்காக சொல்லப்பட்டிருக்கிறதா கிடையாது. சென்ற தேர்தலை போல் கனவு காணக் கூடிய வகையில் தான் சில திட்டங்களை அறிவித்திருக்கிறார்.

  இப்பொழுது தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக அடிக்கடி வருகின்றார். மோடி அவர்கள் பிரதமராக வந்ததற்குப் பிறகு ஐந்து வருடங்களில் வெளிநாட்டில் தான் அதிகம் இருந்திருக்கின்றார். அந்த பயணத்தை தான் அதிகம் மேற்கொண்டிருக்கின்றார். அதற்காக மக்களின் வரிப்பணம் கோடி கோடியாக செலவு செய்யப்பட்டிருக்கின்றது. அவரை இந்தியாவின் பிரதமர் என்று நாம் சொல்லக் கூடாது, வெளிநாடுவாழ் பிரதமர் என்று தான் சொல்ல வேண்டும். வெளிநாட்டில் குடியிருக்கக்கூடிய நிலையில் தான், வெளிநாட்டிற்கு பயணத்தை மேற்கொள்ளக்கூடிய நிலையில் தான் அவர் தன்னுடைய ஆட்சிக் காலத்தை கழித்திருக்கிறாரே தவிர வேறல்ல.

  நீங்கள் 2014 -லிருந்து பிரதமராக இருக்கின்றீர்கள். 5 வருடம் ஆகி விட்டது, இந்த வருடம் முடிகின்ற கட்டம் வந்து அடுத்த தேர்தலும் வந்துவிட்டது. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைகள் முடிந்து புதிய பிரதமர் பதவி ஏற்கும் நாண் என்றைக்கு தெரியுமா? தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 தேதி. அன்றோடு மோடி அவர்களே உங்கள் chapter close

  அதனால்தான் நான் பல கூட்டங்களில் அடிக்கடிச் சொல்வதுண்டு மோடியை யாரும் மோடி என்று கூப்பிடாதீர்கள் மோசடி என்று கூப்பிடுங்கள். தனிப்பட்ட மோடியை நான் சொல்கின்றேன் என்று நினைக்க வேண்டாம். தனிப்பட்ட முறையில் தரைக்குறைவாக தாக்கி பேசுகின்ற பழக்கத்தை தலைவர் கலைஞர் அவர்கள் எங்களுக்கு கற்றுக் கொடுக்கவில்லை. நீங்கள் நாட்டின் பிரதமராக இருக்கின்றீர்கள். எனவே, அந்த நோக்கத்தோடு அந்த உணர்வோடு தான் நான் இந்தக் கேள்வியை கேட்கின்றேன்.

  மோடியின் நண்பர்களாக கூட்டாளிகளாக இருந்தவர்கள் தானே நீங்கள். மோடி ஏன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரவில்லை? புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கேட்டு முதன்முதலில் முழங்கியது திராவிட முன்னேற்றக் கழகம் தான், தலைவர் கலைஞர் அவர்கள் தான். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு கடந்த ஜனவரி மாதம் கொட்டுகிற மழையில் நம்முடைய கூட்டணி கட்சியின் சார்பில். நம்முடைய முதல்வராக இருக்கக்கூடிய மதிப்பிற்குரிய நாராயணசாமி அவர்கள் தலைமையில், டெல்லியில் போராட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் புதுச்சேரி மக்களுக்காக குரல் கொடுத்தார்கள். அப்பொழுதெல்லாம், தேர்தல் அறிக்கையில் சொல்லி ஏமாற்றியது போல் மீண்டும் தேர்தல் அறிக்கைகள் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கக்கூடிய ரங்கசாமி எங்கே போய்விட்டார்?

  இதெல்லாம் யாரை ஏமாற்ற என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, நான் குறிப்பாகச் சொல்ல விரும்புவது. இந்தியாவிற்கு ஒரு நரேந்திர மோடி, தமிழ்நாட்டிற்கு ஒரு எடப்பாடி, புதுவைக்கு ஒரு கிரண் பேடி, நாட்டை நாசமாக்கவே ஆளுநராக தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

  தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை ஹீரோ, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ, மோடி வெளியிட்டு இருக்கக்கூடிய தேர்தல் அறிக்கை ஜீரோ. இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை.

  காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் 26-வது பகுதியில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கப்படும் என்று அவர்களும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். எனவே, ராகுல் காந்தியே அறிவித்து விட்டார். இனி யாருக்கும் சந்தேகம் இருக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் அவர்தான் பிரதமராக வரப் போகின்றார், அதில் எந்த மாற்றமும் கிடையாது.

  கிரண் பேடியின் ஆணவத்தை அடக்க வேண்டும் என்றால் நீங்கள் கை சின்னத்தில் ஓட்டு போட வேண்டும் மறந்து விடாதீர்கள். வேறொன்றும் வேண்டாம். கிரண் பேடியை விரட்ட வேண்டும் என்றால், அவர் ஆணவத்தை அடக்க வேண்டும் என்றால், கை சின்னத்தில் ஓட்டு போட வேண்டும். புதுவையில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கக்கூடிய மக்களாட்சி இன்னும் சிறப்போடு தொடர வேண்டுமென்று சொன்னால் நீங்கள் தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு போட வேண்டும்.

  எனவே, இன்றைக்கு மாநில அந்தஸ்தை பெற ஒரு உறுதிமொழி தந்திருக்கின்றேன். எல்லோரும் தருகின்றார்கள்/ இருந்தாலும் நானும் தி.மு.கழகத்தின் சார்பிலும், தலைவர் கலைஞர் அவர்களின் சார்பிலும் தந்திருக்கின்றேன்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai