புதிய புரட்சியாளர்கள் மன்னிப்பு  கோருவரா?: இளவரசன் தற்கொலை விவகாரத்தில் ராமதாஸ் கேள்வி 

புதிய புரட்சியாளர்கள் மன்னிப்பு  கோருவரா? என்று தர்மபுரி இளவரசன் தற்கொலை விவகாரத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய புரட்சியாளர்கள் மன்னிப்பு  கோருவரா?: இளவரசன் தற்கொலை விவகாரத்தில் ராமதாஸ் கேள்வி 

சென்னை: புதிய புரட்சியாளர்கள் மன்னிப்பு  கோருவரா? என்று தர்மபுரி இளவரசன் தற்கொலை விவகாரத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தருமபுரியைச் சேர்ந்த பட்டியலின இளைஞன் இளவரசன் கொலை செய்யப்படவில்லை; விரக்தியின் உச்சத்தில் அவர் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்று இளவரசனின் சாவு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் சிங்காரவேலு ஆணையம் கூறியிருக்கிறது. விசாரணை ஆணையத்தின் இத்தீர்ப்பு பல ஆண்டுகளாக கட்டவிழ்க்கப்பட்டு வந்த கதைகளுக்கு முடிவு கட்டியுள்ளது.

தருமபுரி இளவரசன் கொலை செய்யப்படவில்லை, அவர் தற்கொலை தான் செய்து கொண்டார் என  இருமுறை நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்விலும், காவல்துறை விசாரணையிலும் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டது. ஆனால், இளவரசனின் மரணத்தில் அரசியல் லாபம் தேடத் துடித்த திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், மனசாட்சியை மரணிக்கச் செய்து விட்டு, இளவரசன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதுகுறித்து நீதிவிசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்றும் நெருக்கடி கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட நீதிபதி சிங்காரவேலு ஆணையம் தான் விரிவான விசாரணைக்குப் பிறகு தருமபுரி இளவரசன் கொலை செய்யப்படவில்லை; மதுபோதையில் தற்கொலை செய்து கொண்டார் என அறிக்கைத் தாக்கல் செய்திருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கை இதுவரை வெளியிடப்படாத நிலையில், தி இந்து குழுமத்தின் பிரண்ட்லைன் இதழ் இதுகுறித்த விவரங்களை சிறப்புச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது.

தருமபுரி மருத்துவமனையில் இரு முறை செய்யப்பட்ட இளவரசனின் உடற்கூறு ஆய்விலும் ‘‘வேகமாக சென்ற தொடர்வண்டியின் பக்கவாட்டுப் பகுதி மோதியதில் அவரது இடதுகையில் காயம் ஏற்பட்டிருக்கலாம்;  தலையில் தொடர்வண்டி மோதியதால் தான் அவர் உயிரிழந்துள்ளார்’’ என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இறப்பதற்கு முன் அவர் மது அருந்தியிருந்தார். மதுவில் உள்ள எத்தில் ஆல்கஹால் என்ற போதைப்பொருள் மட்டும் தான் அவரது உள் உறு-ப்புகளில் காணப்பட்டதாகவும், விஷத்தன்மையுடைய வேறு பொருட்கள் எதுவும் அவரது உடலில் இல்லை என்றும் உடற்கூறு ஆய்வில் குறிப்பிடப்பட்டிருப்பதை  சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி சிங்காரவேலு, இது சந்தேகத்திற்கிடமின்றி தற்கொலை தான் என்று கூறியுள்ளார்.

இளவரசனுக்கு நீண்டநாட்களாகவே தற்கொலை சிந்தனை இருந்திருக்கிறது. ஏற்கனவே சென்னையில் ஒருமுறை தமது மணிக்கட்டை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதையும் நீதிபதி அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதுமட்டுமின்றி, இந்த விஷயத்தில் காவல்துறையினர் மீது கூறப்பட்ட அவதூறுகளை கண்டித்துள்ள நீதியரசர் சிங்காரவேலு, சம்பவம் நடந்த போது தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அஸ்ரா கார்க்கின் செயல்பாடுகளையும் பாராட்டியுள்ளார். நீதியரசர் சிங்காரவேலு அறிக்கை மூலம் பா.ம.க. மீது சுமத்தப்பட்ட பெரும்பழி துடைக்கப்பட்டிருக்கிறது.

இளவரசனின் உயிரிழப்பு வேதனையளிக்கும் துயரமான நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரது மரணம் தொடர்பான விஷயத்தில் செய்யப்பட்ட அரசியல் மிகவும் அருவருக்கத்தக்கது. திமுகவில் தொடங்கி இப்போது அதன் கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பிணத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்தன. தங்களின் அரசியல் பசியை தீர்த்துக் கொள்ள இளவரசனின் மரணம் தான் அவர்களுக்கு உணவாக மாறியது. பாட்டாளி மக்கள் கட்சி மீது பழிச்சொல் எனும் அம்புகளை அடுக்கடுக்காக வீசினார்கள். ஊடகங்களும் இந்த விஷயத்தில் உண்மையைக் கொண்டு வர முயற்சி செய்யவில்லை. மாறாக, அரசியல் கட்சிகளின் பழிகளுக்கு தப்புத்தாளங்களைப் போட்டன. தி இந்து உள்ளிட்ட பெரும்பாலான பத்திரிகைகள் நடுநிலையை நசுக்கி விட்டு, பொய்யை மூலதனமாக்கி பிழைப்பு நடத்தின. மொத்தத்தில் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் புதிய போலி புரட்சியாளர் வேடம் கட்டி ஆடின.

இளவரசன் கொல்லப்படவில்லை; தற்கொலை தான் செய்து கொண்டார் என நீதியரசர் சிங்காரவேலு  ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் பா.ம.க. மீது பழி சுமத்திய புதிய போலி புரட்சியாளர்கள் அனைவரும் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதை அவர்கள் செய்வார்களா?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com