பழமொழிகளை எல்லாம் பாழாய் போக வைத்த தண்ணீர் பஞ்சம்!

சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு தற்போது மிகவும் தீவிரமடைந்துள்ளது. குடிக்க, சுத்தம் செய்ய அடிப்படைத் தேவைகளுக்குக்கூட தண்ணீர்
சென்னை தேனாம்பேட்டை ஜி.என்.டி. சாலையில் லாரியில் வந்த குடிநீரைப் பிடிக்க காத்திருக்கும் கூட்டம்.
சென்னை தேனாம்பேட்டை ஜி.என்.டி. சாலையில் லாரியில் வந்த குடிநீரைப் பிடிக்க காத்திருக்கும் கூட்டம்.


தண்ணீர்.. அது இல்லாததால் பலரது கண்களிலும் கண்ணீர்.. கண்ணீர்!

சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு தற்போது மிகவும் தீவிரமடைந்துள்ளது. குடிக்க, சுத்தம் செய்ய அடிப்படைத் தேவைகளுக்குக்கூட தண்ணீர் கிடைப்பதில்லை என்று குடிசைப் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் முதலே தண்ணீர்த் தட்டுப்பாடு இருந்து வந்தாலும் ஜூன் முதல் வாரத்துக்குப் பிறகு அதாவது குடிநீர் ஆதார ஏரிகளில் முற்றிலுமாக வறண்ட பின்னர் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

குறிப்பாக தண்ணீர் தட்டுப்பாட்டால் குடிசைப் பகுதிகளில் உள்ள 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் ,  வேலைக்காக வெளியூர்களிலிருந்து வந்திருந்து சென்னையில் தங்கியிருக்கும் ஏராளமான இளைஞர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு மேல் குடிநீர் லாரிகள் பெரும்பாலும் மதிய நேரத்தில்தான் வருகின்றன. அந்த நேரத்தில் பலரும் வேலைக்குச் சென்று விடுவதால் குடிப்பதற்கு கூட தண்ணீரைப் பெற முடிவதில்லை. சில நாள்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தாலும் குடிநீர் லாரிகளில் தண்ணீர் பிடிப்பதில் கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு லாரி வந்தாலே அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு விடுகின்றனர். ஒரு குடும்பத்துக்கு மூன்று குடம் தண்ணீர் கூட கிடைப்பதில்லை.  

இந்தச் சூழலை சாதகமாகப் பயன்படுத்தி தனியார் குடிநீர் லாரிகள் ஒரு குடம் தண்ணீரை ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்கின்றனர்.  தண்ணீர் கிடைப்பதே அரிதாக உள்ளது. அதுவும் கிடைக்கும் தண்ணீரின் விலையோ விண்ணை முட்டுகிறது.

இதனால் தண்ணீர் பற்றிய எத்தனையோ பழமொழிகள் பாழாய் போய்விட்டது.

செலவாளியைப் பார்த்து தண்ணியா பணத்தை செலவிடாதே என்பார்கள் மூதாதையர்கள். இப்போது மக்கள் தண்ணிக்காகவே பணத்தை செலவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அவனுக்கு தண்ணீர்பட்டபாடு என்று இலகுவான வேலைக்கு ஒரு வழக்கு உண்டு. இனி யாராவது அப்படி சொன்னால் குடத்தாலேயே ஒரு குத்து குத்துவார்கள் குழாயில் தண்ணீர் பிடிக்கக் காத்திருப்பவர்கள்.

ஆற்றிலேப் போடுவதாக இருந்தாலும் அளந்து போடு.. ஆறே இப்போது அளந்து அளந்துதான் ஓடுகிறது. அதில் எங்கேப் போட?

கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது. உண்மைதான்.. வெள்ளம் கொண்டு போகாது. ஆனால் கோடை வெப்பம் கொண்டு போனதே..

தாராளம் தண்ணீர் பட்டபாடு, நீர் மோர் நெய் பட்ட பாடு.  இது பழமொழி
(இப்போது இருந்தால் தாராளம் நெய் பட்டபாடு, நீர் மோர் தண்ணீர் பட்டபாடு என்று மாற்றியிருப்பார்களோ?)

ஆனால் ஒன்று, ஒரு சில வழக்கு மொழிகள் மட்டும் உண்மையாகியுள்ளன.
நீரின்றி அமையாது உலகு
நீர் உயர நெல் உயரும் என்பது போன்ற பல மொழிகள் உண்மையை எடுத்துரைக்கின்றன.

இன்னும் தண்ணீர் பற்றி எத்தனையோ வழக்கு மொழிகளும், பழமொழிகளும் உண்டு.. இப்போதைக்கு இதோடு நிறுத்திக் கொண்டு குழாயில் தண்ணீர்பிடிக்க குடத்தோடு கிளம்புகிறோம்..
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com