இப்படியெல்லாம் மோடிக்கு பெருமை சேர்க்க முயற்சிக்க வேண்டாம்: தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி அறிவுரை 

இப்படியெல்லாம் மோடிக்கு பெருமை சேர்க்க முயற்சிக்க வேண்டாம் என்று மாநில பாஜக தலைவர் தமிழிசைக்கு, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுரை கூறியுள்ளார்.
இப்படியெல்லாம் மோடிக்கு பெருமை சேர்க்க முயற்சிக்க வேண்டாம்: தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி அறிவுரை 

சென்னை: இப்படியெல்லாம் மோடிக்கு பெருமை சேர்க்க முயற்சிக்க வேண்டாம் என்று மாநில பாஜக தலைவர் தமிழிசைக்கு, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுரை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கடந்த இரண்டு தினங்களாக மிகவும் மனச் சோர்வுடன் காணப்படுகிறார். தமிழகத்தில் இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு முழுமையாக அவர்களுக்கு இல்லை என்பது தெரிந்தவுடன் எங்களை மிகவும் கடுமையாக சாடுகிறார். இருந்தாலும் ஒரு சகோதரியின் விமர்சனமாகவே நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம்.

திராவிட முன்னேற்றக் கழக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடியிடம், கூட்டணி பற்றி பேசியதாக கூறியிருக்கிறார். அரண்டவன் கண்ணிற்கு இருண்டது எல்லாம் பேய் என்பது போல, சகோதரி தமிழிசை அவர்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகிறார். மம்தா பானர்ஜியிடம் இரண்டு முறை பேசுவதற்காக மோடி முயற்சி செய்தார். ஆனால், இரண்டு முறையுமே மம்தா பானர்ஜி மோடியிடம் பேச விரும்பவில்லை. அதற்கு அவர் சொன்ன விளக்கம் 23 ஆம் தேதிக்கு பிறகு புதிய பிரதமர் வருகிறார், அவருடன் பேசிக் கொள்கிறேன் என்று மம்தா கூறிவிட்டார். 

எனவே, மம்தா பானர்ஜியே மோடியிடம் பேச விரும்பாத போது, திராவிட முன்னேற்றக் கழக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் மோடியிடம் என்ன பேசப் போகிறார். இப்படியெல்லாம் மோடிக்கு ஒரு பெருமையை சேர்க்க தமிழிசை முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

கமல்ஹாசன் கோட்சேவை பற்றி சொன்னதற்காக அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் துள்ளிக் குதிக்கிறார். கமல்ஹாசன் அவர்களுடைய நாக்கை அறுத்து விடுவேன் என்று சொல்கிறார். இதை விட ஒரு வன்முறையே இருக்க முடியாது. நீதிமன்றம் தாமாகவே அவர் மீது ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரிக்கலாம். கோட்சே ஒரு கொலைகாரர் மற்றும் தீவிரவாதி என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அவர் மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற போது ஒரு இந்து அமைப்பில் உறுப்பினராக இருந்தார். எப்படி இந்து சமூகத்தில் மகாத்மா காந்தி ஒரு அகிம்சைவாதியாக, வன்முறை எதிர்ப்பாளராக இருந்தாரோ, அதேபோல, அந்த இந்து சமூகத்தில் கோட்சே ஒரு வன்முறையாளராக, கொலைகாரராக, தீவிரவாதியாக இருந்தார் என்பதே உண்மை.

எனவே, கமல்ஹாசன் அவர்கள் சொன்னது இந்து மதத்திற்கு எதிரான வார்த்தைகள் அல்ல, இந்து மதத்தின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு வன்முறைக்கு காரணமான கோட்சேவுக்கும், அவரைப் போன்றவர்களுக்கும் எதிரானது. கமல்ஹாசன் துவக்கி வைத்த இந்த விவாதம் வரவேற்கக் கூடியது. அவருடைய கருத்துத் தெளிவிற்காக அவரை நான் பாராட்டுகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com