மனிதனுக்கே இல்லாதபோது மாடுகளுக்கு ஏது தீவனச் செலவு? தவிக்கும் மாட்டுவண்டித் தொழிலாளர்கள்

வேலை இல்லாத நிலையிலும் மாடுகளுக்குத் தீவனத்துக்காக தினமும் ரூ.100 முதல் ரூ.150 வரை செலவு செய்ய
மனிதனுக்கே இல்லாதபோது மாடுகளுக்கு ஏது தீவனச் செலவு? தவிக்கும் மாட்டுவண்டித் தொழிலாளர்கள்
Updated on
1 min read

ஈரோடு: வேலை இல்லாத நிலையிலும் மாடுகளுக்குத் தீவனத்துக்காக தினமும் ரூ.100 முதல் ரூ.150 வரை செலவு செய்ய வேண்டியுள்ளதால், நிவாரணம் மற்றும் சோளத்தட்டு இலவசமாக வழங்க வேண்டும் என ஒற்றை மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு நகருக்குள் ஏராளமான சுமை ஆட்டோக்கள் வந்த பின்னரும் ஜவுளிக் கடைகள், ஜவுளி, மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட பார்சல்களை வெளியூருக்கு அனுப்பும் பார்சல் சேவை நிறுவனங்கள் முன்பும் ஏராளமான ஒற்றை மாடு பூட்டிய வண்டிகள் இருக்கத்தான் செய்கின்றன.

அவசர வாழ்க்கையில் விரைகின்றவர்களுக்குச் சாலைகளில், வீதிகளில் ஆடி அசைந்து போகும் மாட்டு வண்டிகள் எரிச்சலை உண்டாக்கத்தான் செய்கின்றன. சில நேரங்களில் அந்த வண்டிகளால் போக்குவரத்து நெரிசல்கூட ஏற்படுகிறது. சாலைகளில் சாணம் போட்டுவிடுகின்றன.

இன்னும் ஏன் தான் இவர்கள் முன்னேறாமல் இருக்கிறார்களோ? அதான் சின்னச் சின்னதா வண்டி வந்திருக்கே, வாங்கி ஓட்ட வேண்டியதுதானே, இவங்களால போக்குவரத்து நெரிதல் ஆகிறது என்ற பேச்சு தினமும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இருப்பினும் இன்னும் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் இருக்கத்தான் செய்கின்றன.

இந்த மாட்டு வண்டிகள் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை ஈரோடு நகரை வலம் வருகின்றன. தினமும் ரூ.300 முதல் ரூ.1,000 வரை சம்பாதிக்கும் மாட்டு வண்டிகள் மூலம் வருவாய் ஈட்டுகின்றனர். கடந்த மாதம் 25ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு, கடந்த 15 நாட்களாக ஜவுளி உள்ளிட்ட அனைத்து தொழில்களும் முற்றிலுமாக முடங்கிவிட்டன.

இதனால் மாட்டு வண்டிகளை வைத்துப் பிழைப்பு நடத்தி வந்தவர்கள், உணவுக்குக் கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாடுக்கு தினமும் ரூ.100 முதல் ரூ.150 வரை சோளத்தட்டு உள்ளிட்ட தீவனங்களுக்குச் செலவு செய்ய வேண்டியுள்ளது. கடந்த 15 நாட்களில் ரூ.2,000 வரை தீவனச் செலவு செய்துள்ளோம் என்கின்றனர் மாட்டு வண்டி தொழிலாளர்கள்.

இதுகுறித்து கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளி ஆறுமுகம் கூறியதாவது:

கடந்த 15 நாட்களாக வேலை இல்லாத நிலையில் குடும்பத்தில் உள்ளவர்களின் உணவுத் தேவைக்கே கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஒற்றை மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு அரசு ரூ.3,000 நிவாரண உதவி அளிக்கவும், மாடுகளுக்கு கால்நடைத்துறை மூலம் இலவசமாகச் சோளத்தட்டு வழங்கவும் அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com