திருநெல்வேலி அருகே கரோனா நிவாரணத்திற்காக உண்டியலில் பணம் சேர்க்கும் கிராம மக்கள்!

திருநெல்வேலி அருகே கரோனா நிவாரணத்திற்காக கீழபிள்ளையார்குளம் கிராம மக்கள் ஊர் கோயிலில் பொது உண்டியல் வைத்து அதில் பணம் சேர்த்து வருகிறார்கள்.
திருநெல்வேலி அருகே கரோனா நிவாரணத்திற்காக உண்டியலில் பணம் சேர்க்கும் கிராம மக்கள்!

திருநெல்வேலி அருகே கரோனா நிவாரணத்திற்காக கீழபிள்ளையார்குளம் கிராம மக்கள் ஊர் கோயிலில் பொது உண்டியல் வைத்து அதில் பணம் சேர்த்து வருகிறார்கள். உலகம் முழுவதும் கரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. 

தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கிருமிநாசினி தெளிப்பது, மருத்துவ உபகரணங்கள் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு செலவுகளை மத்திய-மாநில அரசுகள் செய்து வருகின்றன. பிரதமரின் கரோனா நிவாரண நிதி, முதல்வரின் பொது நிவாரண நிதி ஆகியவற்றுக்கு தொழிலதிபர்களும், நிறுவனங்களும் நண்கொடைகள் அளித்து வருகின்றன. 

பொதுமக்களுடம் இக்கட்டான சூழலில் முடிந்த உதவியைச் செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும் அண்மையில் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து பள்ளிக் குழந்தைகள் தங்களது உண்டியல் சேமிப்பைக் கூட அளித்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய-மாநில அரசுகளுக்கு கரோனா நிவாரண நிதி அளிக்கும் வகையில் மானூர் அருகேயுள்ள கீழபிள்ளையார்குளம் கிராம மக்கள் புதிய முடிவு எடுத்துள்ளனர். அதன்படி ஊரின் மையப்பகுதியில் உள்ள கோயிலில் கரோனா நிவாரண நிதிக்கான பொது உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. 

இதில் பொதுமக்கள் தங்களால் இயன்ற தொகையை போடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உண்டியல் திறக்கப்படும் போது அதில் கிடைக்கும் தொகை அனைத்தையும் கரோனா நிவாரணத்திற்கு அனுப்பி வைக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியது: மானூர் அருகேயுள்ள கீழபிள்ளையார்குளத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கால்நடை வளர்ப்பு, விவசாயத்தை நம்பியே பலர் உள்ளனர். கரோனா வைரஸால் உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

மத்திய-மாநில அரசுகள் இந்திய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகுந்த பாராட்டுக்குரியது. அரசுக்கு எங்களால் முடிந்ததை செய்யும் வகையில் முடிவு செய்து கரோனா நிவாரணத்திற்காக பொது உண்டியலை எங்கள் ஊரின் பிள்ளையார் கோயில் வளாகத்தில் வைத்துள்ளோம். அதில் இளைஞர்கள், பெண்கள் தங்களால் முடிந்ததை செலுத்தி வருகிறோம். மேலும், சில வாரங்கள் காத்திருந்து உண்டியலைத் திறக்க முடிவு செய்துள்ளோம். அப்போது கிடைக்கும் தொகையை பிரதமர் அல்லது முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com