

கரோனா ஊரடங்கு காரணமாக தாராபுரம் பகுதியில் கத்தரிக்காய்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் கத்தரிக்காய் பயிரிடப்பட்டுள்ளது. இந்தக் கத்தரிக்காய்களைப் பறிக்கும் விவசாயிகள் நேரடியாக தாராபுரம் உழவர் சந்தை மற்றும் தினசரி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர். மேலும், ஒரு சில வியாபாரிகள் தோட்டங்களுக்கே வந்து கத்திரிக்காய்களை மொத்தமாகக் கொள்முதல் செய்து வந்தனர்.
இந்த நிலையில், தற்போது கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தாராபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை மற்றும் தினசரி மார்க்கெட் ஆகியவற்றைத் தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்று அச்சம் காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் உழவர் சந்தை, மார்க்கெட் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். ஆகவே, விவசாயிகள் கத்தரிக்காய்களை திருப்பூர் தினசரி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கின்றனர். ஆனால் அங்கும் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தாராபுரத்தை அடுத்த சகுனி பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ஆனந்த் என்பவர் கூறியதாவது..
தாராபுரம் பகுதியில் விளைவிக்கப்படும் கத்தரிக்காய் 20 கிலோ மூட்டை ஊரடங்கின் ஆரம்பத்தில் ரூ.300 முதல் ரூ.350 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அப்போது கூட ஆள்கூலி, வண்டி வாடகைக்குக் கட்டுபடியாகி வந்தது. தற்போது ஊரடங்கு காரணமாக 20 கிலோ மூட்டை ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் வண்டி வாடகை, ஆள் கூலியைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறோம். தற்போது 20 கிலோ மூட்டைக்கு ரூ.200 நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஆகவே, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் விலை நிர்ணயம் செய்து கத்தரிக்காய்களை அரசே கொள்முதல் செய்ய முன்வர வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.