850 பேருக்கு தேடிச்சென்று உணவு அளிக்கும் அம்மா உணவகம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அம்மா உணவகத்தில் கரோனா தொற்றை அடுத்து, 3 வேளையும், தேடிச் சென்று தினமும் 850 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. 
850 பேருக்கு தேடிச்சென்று உணவு அளிக்கும் அம்மா உணவகம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அம்மா உணவகத்தில் 3 வேளையும், தேடிச் சென்று தினமும் 850 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. 

கரோனா தொற்று நோயால், கரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் முதல் மருத்துவர்கள், காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள், மத்திய, மாநில அரசுகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஒவ்வொரு விதத்திலும் பாதிக்கப்பட்டு வருகிறோம். அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளிலேயே உணவுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு சண்டையிட்டுக் கொள்வதாகவும் செய்திகள் வருகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்தக் காலத்தில் ஏழ்மையானவர்கள் உணவுக்காக தினமும் பெரும் கஷ்டப்படும் நிலையும் பல்வேறு நாடுகளிலும், மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ளது. ஆனால், உலகமே பாராட்டும் அளவிற்கு, புது விதமான திட்டத்தை தமிழகத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அம்மா உணவகம் என்ற பெயரில் தொடங்கினார். 

இந்த அம்மா உணவகத்தில், ஏழை, எளியவர்களுக்காக  ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், ஒரு சாம்பார் சாதம் ரூ.5 க்கும் விற்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தால், அரசுக்கு ஒரு விதத்தில் பண இழப்பு ஏற்பட்டாலும், ஏழை, எளியவர்களுக்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுரையின் படி, தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சீனாவிலிருந்து புறப்பட்டு, அமெரிக்கா, குவைத், துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகள் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ள கரோனா தொற்று நோய்க்காக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள, இந்நேரத்தில் அம்மா உணவகம் பெரும் உதவியாக உள்ளது. தமிழகம் முழுக்க இயங்கும் அந்த அம்மா உணவகத்தில் இருந்து, ஏழை ,எளியவர்கள், ஆதரவற்றவர்கள், முதியோர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவுப்படி விலையில்லாமல் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அம்மா உணவகம் குறித்து, நகராட்சி ஆணையர் ஆர்.லதா கூறியது. கரோனா தொற்று நோயைத் தடுப்பதற்காகப் போடப்பட்டுள்ள ஊரடங்கு நேரத்தில், உணவு மற்றும் நுகர் பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா .காமராஜ் ஆலோசனையின் பேரில், பொறியாளர் ராஜகோபால், சுகாதார ஆய்வாளர் அருண்குமார் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் அனைவரின் ஒத்துழைப்போடும், நகராட்சியில் உள்ள, ஏழை, எளியவர்கள், ஆதரவற்றவர்கள், முதியோர்கள் என, தினமும் 850 பேருக்கு, கூத்தாநல்லூர் அம்மா உணவகத்தில் இருந்து, 3 வேளையும் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. காலையில் 5 இட்லி 350 பேருக்கும், மதியம் சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் புளி சாதம் என ஏதாவது ஒரு விதமான சாதம் 250 பேருக்கும், இரவு கோதுமை, ரவை, அரிசி உள்ளிட்ட ஏதாவது ஒரு வகையான உப்புமா 250 பேருக்கும், நகராட்சி ஊழியர்களால், அவர்களின் இருப்பிடம் தேடிச் சென்று 3 வேளையும் தினமும வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், சமூகப் பரவலைத் தடுக்கவும், கூட்டத்தையும், அலைச்சலையும் தவிர்ப்பதற்காகவும், ஊரடங்கு அறிவிப்பிற்குப் பிறகு, ரூ.100 க்கு, தக்காளி, வெங்காயம், முருங்கை, உருளை, கேரட், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளைக் கொண்ட பாக்கெட் விற்பனை இல்லம் தேடிச் சென்று வழங்கப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 4 ஆம் தேதி சனிக்கிழமை 172 பாக்கெட்டுகளாக தொடங்கப்பட்ட நடமாடும் காய்கறி விற்பனை, 25 ஆம் தேதி  சனிக்கிழமை 293 பாக்கெட்டுகளாக விற்பனை அதிகரித்துள்ளன. கூத்தாநல்லூர் நகர மக்கள் நகராட்சிக்கு இன்னும் முழு ஒத்துழைப்புக் கொடுத்து, தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்க வேண்டும். அத்தியாவசியமானத் தேவைகளுக்கு வெளியில் வரும் போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். தனிமையில் இருந்து, உங்களையும் காத்து, உங்கள் வீட்டில் உள்ளவர்களையும் பாதுக்காத்து, நாட்டையும் காக்க தனிமையை விரும்புங்கள், தனித்து இருந்து கரோனாவை விரட்ட வேண்டும் என ஆணையர் லதா தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com