இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் துவங்கும் முன்னர் பள்ளிக் கல்வித்துறையில் கீழ் இயங்கும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12,687 பள்ளிகளிலிருந்து 9,45,006 மாணாக்கர்கள் மற்றும் 10,742 தனித்தேர்வாளர்கள் என மொத்தம் 9,55,748 பேர் புதிய பாடத்திட்டத்தின்படி எழுத இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இவையன்னியில், ஏற்கனவே பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாத 23,581 தேர்வர்கள், தற்போது பழைய பாடத்திட்டத்திலேயே பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வினைத் தனித்தேர்வராக எழுதவிருப்பதாகவும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட அன்று, அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட விவரக்குறிப்பில் 100% தேர்ச்சி சதவிகிதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், தேர்ச்சி பெற்ற மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 9,39,829 மட்டுமே எனக் குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.