இந்த மாவட்டத்தில் பசுமை வீடுகள் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடுகளை அதிக அளவில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். திருவாரூர் நகராட்சியில், அனைத்து குடியிருப்புகளுக்கும் பாதாள சாக்கடை கழிவுநீர் வீட்டு இணைப்புத் திட்டத்தின் கீழ் 2,752 வீடுகள் இணைப்பை பெற்றிருக்கின்றன. மன்னார்குடி நகராட்சியில் 7,342 குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணியில், தற்போது 1,212 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கூத்தாநல்லூர் நகராட்சியில், குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் 3,900 குடிநீர் இணைப்புகளில் தற்போது 555 குடிநீர் இணைப்புகளும், திருத்துறைப்பூண்டி நகரத்தில் 2,968 குடிநீர் இணைப்புகளில், தற்போது 566 குடிநீர் இணைப்புகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2020-2021 ஆம் ஆண்டில் 72 ஊராட்சிகளைச் சேர்ந்த 97 குக்கிராமங்களில் 14,740 வீடுகளுக்கு ரூபாய் 19 கோடி மதிப்பீட்டில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிக்கு ஒப்பந்தப் புள்ளிகள் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன.