ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கிரானைட் குவாரிகளை தொடங்க புதியதாக உரிமம் வழங்கக்கூடாது: உயர்நீதிமன்றம்

மதுரை மாவட்டத்தில் புதிய இடங்களில் கிரானைட் குவாரிகளை தொடங்க மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை புதிதாக உரிமம் வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
கிரானைட் குவாரிகளை தொடங்க புதியதாக உரிமம் வழங்கக்கூடாது: உயர்நீதிமன்றம்
Updated On :11 டிசம்பர் 2020, 10:17 am

DIN

மதுரை மாவட்டத்தில் புதிய இடங்களில் கிரானைட் குவாரிகளை தொடங்க மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை புதிதாக உரிமம் வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தமிழகம் முழுவதும் நடந்த கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.சகாயம் குழு அல்லாமல் புதிய நிபுணர் குழுவை அமைத்து இழப்பீடு தொடர்பாக மறு மதிப்பீடு செய்ய உத்தரவிடக்கோரி தென்னிந்திய கிரானைட் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கிரானைட் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், கிரானைட்  குவாரிகளை ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் பொருத்தமான நபர் இல்லை. அவர் அளித்த அறிக்கையே கையில் கிடைக்காத நிலையில், அந்த அறிக்கையை மேற்கோள் காட்டி, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விதியை மீறியதாக அனைத்து குவாரிகளையும் மூடியுள்ளனர். சகாயம் பரிந்துரைத்துள்ள 80 முதல் 90 சதவீதம் வரையிலான பறிமுதல்  என்பது அபரிமிதமானது, அது ஏற்க கூடியது அல்ல என வாதிட்டார்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய்நாராயண், நீதிமன்ற உத்தரவின்படி மாநில , மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பணி துரிதப்படுத்தப் பட்டுள்ளது. மேலும் சட்ட ஆணையர் சகாயம் அளித்த 212 பரிந்துரைகளில், 131 மட்டுமே தமிழக அரசால் ஏற்கக்கூடியது. மற்ற 67 பரிந்துரைகள் ஏற்கக் கூடியது அல்ல. மீதமுள்ள 14 பரிந்துரைகள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டியவை. சகாயம் அறிக்கை குறித்த அரசின் நிலைப்பாட்டை ஆராயும் வகையில் பொதுவான ஒரு வழக்குரைஞரை நியமிக்க நீதிமன்றம் முடிவெடுக்கலாம். மேலும், மதுரை மாவட்டத்தில் வழக்கு தொடர்புடைய குவாரிகளை தவிர பிற குவாரிகள் இயங்கி வருகிறது. புதிய இடங்களில் குவாரிகள் அமைக்க உரிமம் வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உயர்நீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி, சிறப்பு அதிகாரி சகாயம் நியமிக்கப்பட்டு,  ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்த பின், அவரது பரிந்துரைகளை ஏற்கக் கூடாது என கிரானைட் உரிமையாளர்கள் எப்படி கோர முடியும்? என கேள்வி எழுப்பினர். மேலும், கிரானைட் உரிமம் வழங்குவது குறித்து மத்திய அரசின் அமைப்பு மட்டுமே முடிவெடுக்க முடியும் எனத் தெரிவித்த நீதிபதிகள், சகாயம் குழுவின் அறிக்கை கிடைக்காவிட்டாலும், ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு  அதிகாரம் உள்ளது.

குறிப்பாக கீழவளவு, கீழையூர் உள்ளிட்ட 4 கிராமங்களில் உள்ள வீடுகள் சேதமாகும் வகையில், அளவுக்கு அதிகமாக கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக சகாயம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. யானை மலை மட்டுமே எஞ்சியுள்ளது, அதிலும் சில பகுதிகள் வெட்டப்பட்டதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மதுரையில் உள்ள கிரானைட் குவாரிகள் மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களில் அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் கனிமங்கள் சட்டவிரோதமாக எடுக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். அவற்றை கண்காணிப்பதற்காக எல்லைகளில் கண்காணிப்புக் கேமிரா பொருத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் மதுரை மாவட்டத்தில் புதிய இடங்களில் கிரானைட் குவாரிகளை தொடங்க  மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை புதிய உரிமம் வழங்கக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.