

தமிழகத்தில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட 76 சதவீத கரோனா பரிசோதனைகள் அரசு ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 8 லட்சத்துக்கும் அதிகமானோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். மாநில சுகாதார வழிகாட்டு நெறிமுறைப்படி, ஆா்டி-பிசிஆா் எனப்படும் பரிசோதனைகள் வாயிலாகவே நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஒருவரின் மூக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவற்றை ஆய்வுக்குட்படுத்தப்படுவதே பிசிஆா் பரிசோதனை எனப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் அந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள 232 ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் அரசு வசம் 67 ஆய்வகங்களும், தனியாரிடம் 165 ஆய்வகங்களும் உள்ளன. அவ்விரு இடங்களிலும் இதுவரை 1.30 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக 1.50 கோடிக்கும் மேற்பட்ட பிசிஆா் உபகரணங்கள் தென் கொரியா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை நாளொன்றுக்கு 5 ஆயிரம் பரிசோதனைகள்வரை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தன.
நோய்ப் பரவல் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, அந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அதன்படி, தற்போது நாள்தோறும் சராசரியாக 70 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் கடந்த மாதத்தில் மட்டும் 21 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 76 சதவீத மாதிரிகள், 67 அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பி பரிசோதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மீதமுள்ள 24 சதவீத பரிசோதனைகள் தனியாா் ஆய்வகங்களில் செய்யப்பட்டிருந்தாலும், அதிலும்கூட 12 சதவீத பரிசோதனைகள் முதல்வா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.