அரசியலில் என்னை யாரும் இயக்கவில்லை, இயக்கவும் முடியாது: கமல்ஹாசன்
அரசியலில் என்னை யாரும் இயக்கவில்லை, இயக்கவும் முடியாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.


அரசியலில் என்னை யாரும் இயக்கவில்லை, இயக்கவும் முடியாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன், திருநெல்வேலியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார்.
தமிழகத்தில் நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் வரவேற்பு அளிக்கிறார்கள். மாற்றத்திற்கான அரசியலை முன்னெடுக்கிறோம். விவசாயம் தொடங்கி அனைத்திலும் பெண்களுக்கு சமஊதியம் என்பதைக் காட்டிலும், சமஉரிமையைக் கொடுக்க வேண்டும். மக்களிடத்தில் ஆன்மிகம் இருக்கிறது என்றால் அதும் என் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கும். அது எனக்கு தேவையா? இல்லையா? என்பது என்னுடைய பிரச்னை. நான் தான் முடிவு செய்ய வேண்டும்.
அரசியலில் என்னை யாரும் இயக்கவில்லை, யாராலும் இயக்கவும் முடியாது. எனது திரைப்படங்களில் கூட எல்லோரும் நினைப்பதைக் காட்டிலும், நான் நினைப்பதையே நடித்திருக்கிறேன். தேர்தல் கூட்டணி குறித்து தெரிவிக்கும் நேரம் இதுவல்ல. ஆனால், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது அணி என்பது நிச்சயம் உருவாகும். அதில் எங்கள் கட்சி இடம்பெற வாய்ப்புள்ளது.
எம்.ஜி.ஆர். என்பவர் ஒரு கட்சிக்கு மட்டுமே சொந்தமானவர் அல்ல. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். பல்வேறு தொகுதிகளில் இருந்தும் போட்டியிடுமாறு கோரி ரசிகர்கள், தொண்டர்களின் பரிந்துரைகள் வருகின்றன. ஆனால் இன்னும் தொகுதியை முடிவு செய்யவில்லை. எனது மனசாட்சிப்படி கண்டிப்பாக இரு தொகுதிகளில் போட்டியிடமாட்டேன். ஒரேயொரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவேன். தாமிரவருணி உள்ளிட்ட நதிகளைச் சீரமைக்கவும், சுத்தமான குடிநீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். நதிச்சுத்திகரிப்பு என்பது பல நாடுகளில் வெற்றிகரமாக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்துவோம் என்றார்.
முன்னதாக பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், நேர்மையானவர்களை காப்பாற்ற வேண்டியது சமுதாயத்தின் கடமையாகும். பல்வேறு மொழிகளை அறிந்த பாரதி கூறியதைப் போல, பல்வேறு மொழிகளில் நடித்த நானும் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்குமில்லை என பெருமையோடு கூற விரும்புகிறேன். சொற்களுக்கு எவ்வித பஞ்சமும் இல்லாத மொழி தமிழ். இத்தகையச் சூழலில் ஒரு மொழியை தமிழர்கள் அனைவரிடமும் திணிப்பது சரியானதல்ல. வானவியல், அறிவியலில் பண்டைய தமிழர்கள் நுட்பம் பெற்றுத் திகழ்ந்துள்ளனர். அதற்கு சங்கப்பாடல்களில் பல்வேறு சான்றுகள் உள்ளன.
கல்வி பயிலும் அனைவரும் சம்பளம் பெறும் தொழிலாளர்களாக மாறாமல், தனித்தனி முதலாளிகளாகவும், இளம் தொழில் முனைவோராகவும் மாற வேண்டும். தமிழகத்தில் இதுவரை பழிவாங்கும் அரசியலும், பழிபோடும் அரசியலுமே முன்னணியில் இருந்துள்ளது. அதைத்தாண்டி முன்னேற்றத்திற்கான வழி தேடும் அரசியலை செய்யப் போகிறோம். எங்களின் சின்னம் தற்காலிகமாக நிராகரிக்கப்பட்டாலும், சின்னத்தை போராடிப் பெறுவோம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...