வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் உள்பட மூவரிடம் குற்றப்பத்திரிகை வழங்கல்

ஈரோட்டில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய வழக்கின் குற்றப்பத்திரிகை நகலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 3 பேர், ஈரோடு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பெற்றுக்கொண்டனர்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 12:56 pm

DIN

ஈரோட்டில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய வழக்கின் குற்றப்பத்திரிகை நகலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 3 பேர், ஈரோடு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பெற்றுக்கொண்டனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனியில் கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி சார்பில் தமிழர் எழுச்சி உரை வீச்சு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான்,  திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். 

இதில், இவர்கள் மூவரும் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக ஈரோடு கருங்கல்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படுவதாக ஈரோடு நீதிமன்றம் அறிவித்தது. இதற்காக, சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் நேற்று ஈரோடு நீதிமன்றத்திற்கு நேரில் வந்து, ஈரோடு விரைவு நீதிமன்ற நீதிபதி வடிவேல் முன் ஆஜராகி, குற்றப்பத்திரிக்கை நகலைப் பெற்றுக்கொண்டனர். இவர்கள் மூவரையும் வரும் ஜன.,5ம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும். நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஆட்சியை அமைப்போம் எனக் கூறிக்கொண்டு எம்.ஜி.ஆர். போன்றவர்களை முன் நிறுத்தி அரசியல் செய்வது ஏற்புடையது அல்ல. மத்திய அரசின் வேளாண் சட்டம் நன்மையானது அல்ல. விவசாயிகள், மக்களிடம் கருத்துக் கேட்காமல் வேளாண் சட்டத்தை இயற்றியுள்ளனர். 

தில்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம், வேளாண் சட்டத்தினால் நன்மை இருக்குமானால் அதனை மத்திய வேளாண் துறை அமைச்சர் நேரில் விளக்கம் தர வேண்டும். அதேபோல், வேளாண் சட்டம் நல்லது தான் என கூறும் தமிழக முதல்வர் அதனை அறிக்கையாக வெளியிட வேண்டும். தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் போது மொழி வாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர்களுக்கு அவரது கட்சியினர் நீதிமன்றம் வளாகம் முன் நின்று வரவேற்பு அளித்தனர். அங்கு பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.