அரியலூரில் செய்யப்பட்டிருக்கும் திட்டப் பணிகள்: முதல்வர் பழனிசாமி விளக்கம்
கீழப்பழூரில் உணவுப் பூங்கா அமைக்கும் பணிகள் உள்பட அரியலூரில் செய்யப்பட்டிருக்கும் அரசுத் திட்டப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.


கீழப்பழூரில் உணவுப் பூங்கா அமைக்கும் பணிகள் உள்பட அரியலூரில் செய்யப்பட்டிருக்கும் அரசுத் திட்டப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் ஆற்றிய உரை:
அரியலூர் மாவட்டத்தில், ஆரம்பத்தில் சற்று அதிகமாக இருந்து கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் அரசு அறிவித்த ஆலோசனைகளின்படி மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் சரியான முறையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தற்போது படிப்படியாகக் குறைந்து, கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.
முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் முகாமின் மூலம், அரியலூர் மாவட்டத்தில் பெறப்பட்ட 30,422 மனுக்களில் தகுதியான 20,053 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில், 15,630 மனுக்கள் ஓய்வூதியம் வேண்டியும், 7,838 னுக்கள் வீட்டுமனைப் பட்டா மாறுதல் வேண்டியும் விண்ணப்பித்துள்ளனர். அரசு அவற்றையெல்லாம் ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகம் மூலம் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2019-20ஆம் நிதியாண்டில் 6,000 நபர்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை இம்மாவட்டத்தில், 6,316 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுப்பணித் துறையின் சார்பாக 2019-20ஆம் ஆண்டில் 6 தடுப்பணைகள் கட்டும் பணிகள் மற்றும் 8 ஏரிகள் புனரமைக்கும் பணிகள் என மொத்தம் 14 பணிகள் ரூபாய் 63 கோடியே 95 இலட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு 13 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன, மீதமுள்ள, சுண்டக்குடி கிராமத்தில் தடுப்பணை கட்டும் ஒரு பணி முடியும் தருவாயில் உள்ளது. 2019-20ஆம் ஆண்டில் தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம் பகுதி 2-இன் கீழ் அரியலூர் மற்றும் வட்டம் நந்தியாறு-கூழையாறு உபவடிநில பகுதியில் ரூபாய் 15.72 கோடி மதிப்பீட்டில் 19 ஏரிகள் மற்றும் 55 கிலோமீட்டர் நீளமுள்ள வாய்க்கால்கள், வரத்து கால்வாய்கள் புனரமைக்கும் பணிகள் 40 விழுக்காடு நிறைவு பெற்றுள்ளது, எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2019-20ஆம் ஆண்டில் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தை சார்ந்த பழமை வாய்ந்த கரைவெட்டி பறவைகள் சரணாலயம் மேம்படுத்தப்பட்டு, பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள ஏரி ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 25 விழுக்காடு பணிகள் நிறைவு பெற்றுள்ளன, எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரியலூர் வட்டம், தவுத்தாய்குளம் கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே ரூபாய் 3.75 கோடி மதிப்பீட்டில் ஒரு பாலம் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. அரியலூர் வட்டம் சம்பந்தன்குடி கிராமத்தில் வைப்பம் குளத்திற்கு நீர் வழங்கும் பொருட்டு, அருங்கால் ஓடையின் குறுக்கே ரூபாய் கோடி மதிப்பீட்டில் ஒரு அணைக்கட்டு அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
அரியலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் கூடுதலாக 200 படுக்கைகள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கு ரூபாய் 6.16 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மீன்சுருட்டி, டி.பழுர் மற்றும் விக்கிரமங்கலம் ஆகிய இடங்களில் கால்நடை மருந்தக கட்டடம் ரூபாய் 1.04 கோடி செலவில் கட்டடடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அரசு தலைமை கொறடா அவர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும், அரியலூர் மாவட்ட மக்களும் அரசுக்குத் தொடர்ந்து வைத்த கோரிக்கையினை ஏற்று, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக் கட்டடங்கள் கட்டும் பணி ரூபாய் 347 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
ஜெயங்கொண்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டும் பணி ரூபாய் 20.88 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு பிரிவுக் கட்டடம் கட்டும் பணி ரூபாய் 18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
நெடுஞ்சாலைத் துறையைப் பொறுத்தவரை, அரியலூர் நகரத்தில் ரூபாய் 31.23 கோடி மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அரியலூர் மாவட்டம் - கோட்டைக்காடு மற்றும் கடலூர் மாவட்டம் - பெண்ணாடம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையிலும், சில்லக்குடி மற்றும் கல்லகம் இரயில்வே நிலையங்களுக்கு இடையிலும் இரண்டு உயர்மட்ட பாலங்கள் கட்டும் பணிகள் ரூபாய் 41.66 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. வைப்பூர் மற்றும் முத்துவாஞ்சேரி இடையே மருதையாற்றின் குறுக்கே ரூபாய் 38.20 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்ட கருத்துருக்கள் அரசின் பரிசீலனையில் உள்ளது. கீழப்பழூர் - பூண்டி முதல் அயன்சுத்தமல்லி வரை உள்ள சாலையில் கி.மீ.2/6-ல் உயர்மட்ட பாலம் கட்ட ரூபாய் 4.23 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது.
அரியலூர் நகருக்கு மேற்குபுறமாக புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கின்ற பணி நடைபெற்று வருகிறது. பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலை-227-இல் 59 கி.மீ. நீளத்திற்கு ரூபாய் 1265 கோடி மதிப்பீட்டில் கல்லகம் கேட் முதல் மேலக்கருப்பூர் வரை நான்கு வழிச்சாலை மற்றும் மேலக்கருப்பூர் முதல் மீன்சுருட்டி வரை இரு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் என்எச் 45சி-இல் 50 கி.மீ. நீளத்திற்கு ரூபாய் 1460 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அரியலூர் முதல் வி.கைகாட்டி வரையிலான 12.40 கி.மீ. நீளமுள்ள இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்திட ரூபாய் 200 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி கூடுதல் நிதியுதவித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-2, திருச்சி கோட்டத்தின் வாயிலாக விரைவில் பணி துவங்கப்பட உள்ளது.
வேளாண்மைத் துறையைப் பொறுத்தவரை, நுண்ணீர் பாசனத் திட்டத்தில் 4 ஆண்டுகளில் 70 கோடியே 14 லட்சம் மானியத்தில் நுண்ணீர் பாசனம் 50,820 ஏக்கர் நிறுவப்பட்டிருக்கிறது. 2020-21-ல் இந்தத் திட்டத்திற்காக ரூபாய் 35 கோடியே 85 லட்சம் அரியலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த நான்காண்டுகளில் 1,18,531 விவசாயிகள் பதிவு செய்தவர்களில் 80,475 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 60 கோடியே 60 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2016-17ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின்போது, விவசாயிகள் வைத்த கோரிக்கையை ஏற்று, அரசு, மாநில பேரிடர் நிவாரண நிதியாக 49,481 விவசாயிகளுக்கு ரூபாய் 20 கோடியே 47 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
2018 - 19 ஆம் ஆண்டில் மக்காச்சோளப் பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் பாதிக்கப்பட்ட 16,640 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 8 கோடியே 54 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் அமெரிக்கன் படைப்புழுவைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தால் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 5,820 ஹெக்டேர் பரப்பிற்கு பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பதற்கு ரூபாய் 2 கோடியே 3 இலட்சம் செலவினம் மேற்கொள்ளப்பட்டது. நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கத்தில் 62 ஆயிரத்து 500 ஏக்கரில் 16 கோடியே 48 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவில் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு 37 ஆயிரத்து 980 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டம் 2020 - 21ல் 30,000 ஏக்கரில் 5 கோடியே 74 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
காய்கறிகள் மற்றும் பழங்கள் பதப்படுத்துவதில் மேம்பாடு அடைந்திடவும், விவசாயிகள், உணவு பதப்படுத்துவோர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பயன்பெறும் வகையில் திருமானூர் வட்டத்தில் கீழப்பழூரில் உணவு பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சித் திட்டத்தில் 2019-20 ஆம் நிதியாண்டில் 98 சிறுபாசன ஏரிகள் ரூபாய் 4.82 கோடி மதிப்பீட்டில் 693 குளங்கள் மற்றும் மற்றும் ஊரணிகள் ரூ.6.76 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் சூரியமின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. பிரதம மந்திரி குடியிருப்புத்திட்டத்தில் 2016-17 முதல் 2019-20 ஆண்டுகளில் 11,931 வீடுகள் அரியலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு இதுவரை 5,841 வீடுகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதியுள்ள வீடுகளை விரைவாக முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 2017-18 முதல் 2019-20 வரை உள்ளாட்சித் துறையில், 698 கி.மீ நீளத்திற்கு, 557 சாலை மேம்பாட்டுப் பணிகள் ரூபாய் 183.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 269 சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு குடிநீர் இணைப்பை வழங்குவதற்காக, ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2020-21 ஆம் ஆண்டில் முதற்கட்டமாக 95 ஊராட்சிகளில் உள்ள 397 குக்கிராமங்களில் ரூபாய் 45.47 கோடி மதிப்பீட்டில் 60,309 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. அரியலூர் நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டம் ரூபாய் 30.93 கோடி மதிப்பீட்டில் 28.5.2020 மக்கள் பயன்பாட்டில் உள்ளது. ரூபாய் 15.18 கோடி மதிப்பீட்டில் 0020 திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து அரியலூர் நகராட்சிக்கு வரும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பழைய பிரதான குழாயை மாற்றி புதிய குழாய் அமைத்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டத்தின் 2020-21-ன் கீழ் அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 8.42 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கு அரசாணை வழங்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
மகளிர் திட்டத்தைப் பொறுத்தவரை, அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 4,872 சுய உதவிக் குழுக்களில் 61,340 உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்காக அரசால் ரூபாய் 324.12 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டு அரியலூர் மாவட்ட சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 215 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 1,638 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.50.25 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த மூன்றாண்டுகளில் 2,434 மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் கொடுக்கப்பட்டது. அதற்காக ரூபாய் 5.98 கோடி மானியமாக வழங்கப்பட்டிருக்கின்றது. 2019- 20 ஆம் ஆண்டில் 1,088 நபர்களுக்கு உழைக்கும் மகளிருக்கு வாகனம் வழங்குவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை 258 நபர்களுக்கு வாகனம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக ரூபாய் 64.50 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
தொழில் துறையைப் பொறுத்தவரை, அரியலூர் மாவட்டத்தில், மத்திய அரசின் சொத்து பிணையில்லா அவசரகால கூடுதல் கடன் திட்டத்தில் 2,423 குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூபாய் 27.91 கோடி கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மல்லூர் கிராமத்தில் ஒரு தொழிற்பேட்டை சுமார் 25.34 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது. முதற்கட்டமாக இத்தொழிற்பேட்டையில் சுமார் 5.51 ஏக்கர் பரப்பளவில் 26 தொழிற்மனைகள் மேம்படுத்தப்பட்டு, 2 தொழில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரியலூர், தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தினை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையின் அடிப்படையில் ரூபாய் 850 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டு, இயங்கி வருகிறது.
இவ்வாறு பல்வேறு திட்டங்கள் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், பல திட்டங்களை அரசு செயல்படுத்தவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...