'பிக்பாஸ்' பார்த்தால் ஒரு குடும்பம்கூட நன்றாக இருக்காது: முதல்வர் பழனிசாமி

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் ஊரிலுள்ள ஒரு குடும்பம்கூட நன்றாக இருக்காது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
Updated on
1 min read

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் ஊரிலுள்ள ஒரு குடும்பம்கூட நன்றாக இருக்காது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
அரியலூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வரிடம், லஞ்ச ஒழிப்பு சோதனை தொடர்பாக கமல்ஹாசன் அண்மையில் தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு முதல்வர் அளித்த பதில், இது தவறான கருத்து. அரசாங்கம்தானே சோதனை நடத்துகிறது. தமிழ்நாட்டிலுள்ள லஞ்ச ஒழிப்புத் துறை யாருக்குக் கீழ் வருகிறது? தமிழ்நாடு அரசு சிறப்பான முறையில் செயல்பட வேண்டுமென்றுதானே நினைக்கிறது. எங்கும் தவறு நடக்கக்கூடாது, தவறு நடந்தால் அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென்ற அடிப்படையில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர் புதிதாக கட்சியை தொடங்கியுள்ளார். ரிடையர்டு-ஆகி வந்துள்ளார். அவருக்கு என்ன தெரியும்?
70 வயதாகிறது. 70 வயதில் பிக்-பாஸ் நடத்திக் கொண்டிருக்கிறார். பிக்-பாஸ் நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்? இதை பார்த்தால் ஊரிலுள்ள ஒரு குடும்பம்கூட நன்றாக இருக்காது. அப்படிப்பட்ட தலைவர்கள் சொல்லும் கருத்தை நீங்கள் சொல்வீர்களா? அவர் ஒரு கட்சித் தலைவர், அவர் கேட்கிறார் என்று நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கிறீர்களே? நல்ல கேள்வி கேளுங்கள். அவரெல்லாம் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக இல்லை. 

நன்றாக இருக்கும் குடும்பத்தைக் கெடுப்பதுதான் அவருடைய வேலை. அந்த டிவி தொடரைப் பார்த்தால் குழந்தைகளும் கெட்டு விடும், நன்றாக உள்ள குடும்பமும் கெட்டு விடும். ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எத்தனையோ உள்ளன. நதிகள் இணைப்பைக் காட்டலாம். விவசாயிகள் மேற்கொள்ளும் பண்ணைத் திட்டம், புதிதாக என்னென்ன நடவு செய்கிறார்கள், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளவை எவை என மாணவச் செல்வங்களுக்கு நல்ல அறிவுரையை கொடுங்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் சினிமா மூலம் நல்ல செய்திகளை சொல்லி, நல்ல பாடல்களைப் பாடியுள்ளார். 
இவர் ஒரு படத்திலாவது நாட்டு மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய பாடல்களைப் பாடியுள்ளாரா? அந்தப் படத்தைப் பார்த்தால் அத்துடன் அந்தக் குடும்பம் காலியாகிவிடும், அதுபோன்ற படங்களில்தான் நடிக்கின்றனர். எனவே, அவர் சொல்லும் கருத்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எவ்வளவோ சிறந்த தலைவர்கள் இருந்தார்கள். எம்.ஜி.ஆர், அம்மா நாட்டு மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர்கள். 
அவர்கள் இந்த நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர்கள். அப்படிப்பட்ட தலைவர்கள் போடுகின்ற திட்டங்கள்தான் இப்போதும் உயிரோட்டமுள்ள திட்டங்களாக இருந்து கொண்டிருக்கிறது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com