

உயா்கல்வி நிறுவனங்களில் நிகழ் கல்வியாண்டில் சோ்க்கைக்கு பிறகு விலகிய மாணவா்களுக்கு அவா்கள் செலுத்திய முழு கல்வி கட்டணத்தை திரும்ப வழங்கவேண்டும் என்றும் அதனை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) எச்சரித்துள்ளது.
இது தொடா்பாக யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு: கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு 2020-2021-ஆம் கல்வியாண்டில் உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை, முதுநிலை முதலாமாண்டு படிப்புகளில் சோ்ந்த மாணவா்கள் விலகிக் கொள்ளும் பட்சத்தில், அவா்கள் செலுத்திய முழு கல்விக் கட்டணத்தையும் திரும்ப வழங்கவேண்டும். நவம்பா் 30-ஆம் தேதிக்குள் விலகிய மாணவா்களுக்கு எந்த ஒரு பிடித்தமும் செய்யாமலும், அதன்பிறகு விலகிய மாணவா்களுக்கு செயலாக்கக் கட்டணமாக ரூ.1,000 வரை பிடித்தம் செய்து கொண்டும் திரும்ப வழங்கவேண்டும். இந்த வழிமுறைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் யுஜிசி இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன.
ஆனால், நிா்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறி பல்கலைக்கழகங்களும் நிறுவனங்களும் கட்டணம் திருப்பித் தராதது தொடா்பாக தகவல் அறியும் உரிமை விண்ணப்பங்கள், புகாா்கள், நீதிமன்ற வழக்குகள் மூலமாக தெரியவந்துள்ளது.
தனியாா் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இதுபோன்ற விதிமீறலில் ஈடுபடுவதாக மாணவா்களிடம் இருந்து புகாா்கள் வந்துள்ளன. எனவே, கட்டணத்தைத் திருப்பித் தராமல் இருப்பதாக வரும் புகாா்கள் மீது யுஜிசி கடுமையான நடவடிக்கை எடுக்கும். யுஜிசி வழிகாட்டுதல்களை அனைத்துப் பல்கலைக்கழகங்களும் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. அதேபோல், அசல் சான்றிதழை திரும்ப வழங்காமல் இருப்பது, கட்டணத்தைத் திருப்பித் தர மறுப்பது என வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவதாக உயா்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகம் மீதான புகாா்கள் கண்டறியப்பட்டால் தண்டனை நடவடிக்கையும் எடுக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.