எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது; இருவருக்கும் மக்கள்தான் வாரிசு: முதல்வர் பழனிசாமி

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது; அவர்கள் இருவருக்கும் மக்கள்தான் வாரிசு என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். 
சேலம் வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடியில் வெள்ளிக்கிழமை அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைக்கும் முதல்வர் கே.பழனிசாமி.
சேலம் வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடியில் வெள்ளிக்கிழமை அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைக்கும் முதல்வர் கே.பழனிசாமி.
Updated on
2 min read



சேலம்: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது; அவர்கள் இருவருக்கும் மக்கள்தான் வாரிசு என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். 

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி வாணியம்பாடியில் அமைக்கப்பட்டுள்ள மூன்றாவது அம்மா சிறு மருத்துவமனையை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்து பேசியதாவது:

தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்க வேண்டும் என்பதற்காக இரண்டாயிரம் ‘அம்மா சிறு மருத்துவமனைகள்’ தொடங்கப்பட்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். 

அதன்படி, ஏழைகள், விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பயனடைய இந்த ‘அம்மா சிறு மருத்துவமனைகள்’ திறந்து வைக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் புதன்கிழமை சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி பகுதியில் முதல் ‘அம்மா சிறு மருத்துவமனை’ திறக்கப்பட்டது.

வியாழக்கிழமை காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் தலைவாசல் லத்துவாடி என்ற கிராமத்தில் இரண்டாவது ‘அம்மா சிறு மருத்துவமனை’ திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது கிராம மக்களுக்கு காய்ச்சல், தலைவலி, சிறிய நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக ‘அம்மா சிறு மருத்துவமனைகளை’ நாடி குணப்படுத்திக் கொள்ளலாம் என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

இந்நிலையில், சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி வாணியம்பாடியில் அமைக்கப்பட்டுள்ள மூன்றாவது அம்மா சிறு மருத்துவமனையை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்து பேசியதாவது:

மறைந்த முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கும் வாரிசு கிடையாது. அவர்கள் இருவருக்குமே தமிழக மக்கள் தான் வாரிசு. 

அவர்கள் செயல்படுத்திய திட்டங்கள் உயிரோட்டமுள்ள திட்டங்களாகும். எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டம் சரித்திரம் திட்டமாகும்.

அம்மா வழியில் நடக்கும் இந்த அம்மா அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஏழை எளிய மக்கள் மருத்துவ சிகிச்சை பெற தமிழகம் முழுவதும் 2000 அம்மா சிறு மருத்துவமனை திறந்து வைத்து வருகிறோம்.

இந்த சிறு மருத்துவமனையில் நோய்க்கு தக்கவாறு தகுந்த சிகிச்சை அளிக்கப்படும்.

சேலம் மாவட்டத்தில் 100 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனை திறக்கப்படும். அம்மா சிறு மருத்துவமனை திட்டம் சரித்திர திட்டமாகும்.

திருமணத்திற்கு பெண் குடும்பத்தாருக்கு 4 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. தற்போது அது 8 கிராமம் தங்கமாக  உயர்த்தி வழங்கி வருகிறோம்.

இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் 4 லட்சத்து 63 ஆயிரத்து 500 பேர் பயனடைவார்கள். இதன் மூலம் நிரந்தர குடிநீர் இந்த பகுதி மக்களுக்கு கிடைக்கும். 

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரியானூர் பிரிவு சாலையில் அடிக்கடி சாலை விபத்து நடந்து வந்தது. இதனை அறிந்து தற்போது அங்கு ரூ.45 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் விரைவில் பயன்படுக்கு வரும் நிலையில் உள்ளது.

இந்த அரசு பல்வேறு சாலை பணிகளை சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் தரமான சாலைகள் வழங்கி வருகிறோம். 

இந்த அம்மாவின் அரசு மக்களின் அரசு. மக்களின் எண்ணத்தை  நிறைவேற்றி வருகிறோம். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எங்கள் மீது குற்றம் சாட்டி வருகிறார். 

அவர் காணொலி மூலம் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். நாங்கள் நேரில் சென்று மக்களை சந்தித்து வருகிறோம். பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களுக்கு அம்மா அரசு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வருகிறது.

கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று ஆய்வுக்கூட்டம் நடத்தி தொற்று பரவலை கட்டுப்படுத்தி உள்ளோம். இதை மறுக்க முடியுமா. மக்களுக்காக கடுமையாக உழைத்து வருகிறோம். நான் மட்டுமல்ல, அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், உள்ளாட்சித் தலைவர்கள் என அனைவரும் இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறோம்.

திமுக அப்படியா, சுயநலவாதிகள். தலைவர் முதல் தொண்டர் வரை அப்படித்தான் இருப்பார்கள்.

எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கம் அதிமுக. அவர்கள் வழியில் அமைந்த இந்த அரசு அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது

அதிமுக என்றும் மக்களுக்கு உழைக்கும் கட்சி. அதிமுகவில் உழைத்தால் பதவிக்கு வரமுடியும். உழைப்பவர்களை மக்கள் மதிப்பார்கள். பதவிகள் தேடி வரும். இந்த இயக்கத்தை உடைக்க முயற்சி செய்தார்கள். முடியவில்லை. நாங்கள் மக்களுக்கு தொடர்ந்து பாடுபடுவோம் என்று முதல்வர் பழனிசாமி கூறினார். 

முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு வாணியம்பாடி பகுதி முழுவதும் திரளான பொதுமக்கள் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த அம்மா சிறு மருத்துவமனை தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். சனிக்கிழமை மட்டும் வார விடுமுறை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com