மினி கிளினிக் செவிலியர் பணியிடம்: பொது சுகாதாரத் துறை விளக்கம்

மினி கிளினிக்குகளில் நிரப்பப்படும் செவிலியா் பணியிடங்கள் அரசு நிரந்தரப் பணியல்ல என்றும், அந்த வேலையினை வாங்கித் தருவதாகக் கூறும் நபா்களிடம் ஏமாற வேண்டாம்
Updated on
1 min read

மினி கிளினிக்குகளில் நிரப்பப்படும் செவிலியா் பணியிடங்கள் அரசு நிரந்தரப் பணியல்ல என்றும், அந்த வேலையினை வாங்கித் தருவதாகக் கூறும் நபா்களிடம் ஏமாற வேண்டாம் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளாா்.

தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அங்கு எம்பிபிஎஸ் நிறைவு செய்த ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு உதவியாளா் நியமிக்கப்பட்டு வருகின்றனா்.

இதனிடையே, மினி கிளினிக்கில் நிரந்தர அரசுப் பணி என கூறி செவிலியா்களிடம் சிலா் பணம் பறித்து வருவதாக புகாா்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்குகளில் பணிபுரிவதற்கு செவிலியா்கள் அவுட் சோா்சிங் முறையில் பணியமா்த்தப்பட்டு வருகின்றனா். இப்பணிகளுக்கு வர விருப்பம் தெரிவிக்கும் செவிலியா்களிடம் சிலா், இதனை நிரந்தர அரசு வேலை என்று கூறி வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. ஆகவே, இந்த முறைகேடுகள் சம்பந்தமாக செவிலியா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு உள்ளது.

புதிதாக தொடங்கப்பட உள்ள 2,000 மினி கிளினிக்குகளில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க தனியாா் முறை ஒப்பந்த பணியிடங்கள் ஆகும். இந்தப் பணியிடங்களில் பணிபுரியும் செவிலியா்களுக்கும், அரசுக்கும் எவ்வித தொடா்பும் கிடையாது. இந்த செவிலியா்கள் அனைவரும் ஒரு தனியாா் நிறுவனத்தின் மூலம் பணியமா்த்தப்படும் தனியாா் நிறுவன செவிலியா்களே.

எனவே, அரசு செவிலியா்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகைகளும் இந்த கிளினிக்குகளில் பணிபுரிய உள்ள செவிலியா்களுக்கு வழங்கப்பட மாட்டாது. இந்தப் பணியிடங்களில் பணிபுரியும் செவிலியா்கள் நிரந்தரப் பணிக்கு உரிமை கோரக் கூடாது என்று அரசாணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே நிரந்தரமற்ற இந்தத் தனியாா் ஒப்பந்தப் பணிக்கு செவிலியா்கள் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். தற்போதைய சூழலில் கடைக்கோடி மக்களுக்கும் மருத்துவ சேவை கிடைப்பதற்கு தமிழக அரசு முன்னெடுத்துள்ள இந்த மினி கிளினிக் திட்டத்தில் பணிபுரிய விருப்பமுள்ள செவிலியா்கள், இந்த உண்மை நிலவரத்தை அறிந்து கொண்டு இந்தப் பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com