

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையின் தெற்குப்புறத்தில் உள்ள ராயலூர் சாலை பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் வைத்திருந்த சாராய ஊறல்களை செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் அழித்தனர்.
மலைப்பகுதியில் சாராய ஊறல்களை அழித்த சம்பவம் சங்ககிரி பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மலைப்பகுதி அதிக பரப்பளவு கொண்டுள்ளதையடுத்து அதிகமான மலைக்காவலர்களை நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் தொல்பொருள்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்ககிரி மலைக்கோட்டையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்டதாக உள்ளன. சங்ககிரி மலையானது நிலப்பரப்பிலிருந்து சுமார் 1500 அடி உயரமும், கடல் மட்டத்திலிருந்து 2345 அடி உயரமும் கொண்டது. சங்ககிரி மலையானது 10 கோட்டை வாயில் அரண்களும், கொத்தளங்கள், கண்காணிப்பு மேடைகள், மண்டபங்கள், நீர்ச்சுனைகள், பதினைந்திற்கும் மேற்பட்ட குளங்கள், சேமிப்புக் கிடங்குகள், கோயில்கள், தர்ஹாக்கள், கொலைக்களங்கள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள் அதிகமாக உள்ளன.
மலையின் உச்சியில் அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவியுடன் நின்ற நிலையில் உள்ளார். இக்கோயிலில் கடந்த பல ஆண்டுகளாக ஆவணி மாத கடைசி சனிக்கிழமையன்று புரட்டாசி மாத வழிபாடு தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்று புரட்டாசி மாத விரதத்தைத் தொடங்குகின்றனர்.
இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் அன்று சங்ககிரி மலையடிவராத்தில் உள்ள நான்கு வீதிகளில் தேர்த்திருவிழா நடைபெற்று வருகின்றன. மேலும் மலை உச்சியின் மேலே வடகிழக்குப்பதியில் இஸ்லாமியர்கள் தர்ஹாவும் உள்ளன இந்த தர்ஹாவுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இஸ்லாமியர்கள் வந்து வழிப்பட்டுச் செல்கின்றனர்.
இம்மலையில் சுதந்திரப்போராட்ட வீரர் தீரன் சின்னமலை 1805ம் ஆண்டு ஜூலை மாதம் 31ம் தேதி ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டுள்ளார். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த மலைக்கோட்டை தொல்பொருள் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதிக பரப்பளவினை கொண்டுள்ள மலைக்கு தொல்பொருள் துறையின் சார்பில் ஒரு மலைக்காவலர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மலையின் தெற்குபுரமுள்ள ராயலூர் சாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் சாராய ஊறல்களை வைத்திருப்பதாக சங்ககிரி காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் மலைக்காப்பாளர், மலைக்காவலர் ஆகியோர் முன்னிலையில் சோதனை நடத்தி 5 லிட்டர் சாராய ஊறல்களை அழித்தனர். அச்சம்பவம் சங்ககிரி பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சங்ககிரி மலை அடிவாரத்திலிருந்து உச்சிக்குச் செல்லும் வரை உள்ள மண்டபங்களில் சிலர் போதையில் படுத்து கிடப்பதால் சுவாமிகளை தரிசனம் செய்யவும், தர்ஹாவுக்கு செல்லும் பக்தர்கள் அச்சமூக விரோதிகளால் மிரட்டப்பட்டு வருகின்றனர். அதனையடுத்து மலைக்குச் செல்வதற்குப் பக்தர்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே அதிக பரப்பளவு கொண்டுள்ள மலையில் அதிகமான பாதுகாவலர்களை நியமனம் செய்து மலைப்பகுதிகளைப் பாதுகாக்க வேண்டுமென தொல்பொருள் துறையினருக்குப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.