

நாமக்கல்: நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற குடைவறைக் கோவிலான அரங்கநாதர் சுவாமி ரங்கநாயகி தாயார் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக சுவாமியின் ஜடாரியை அர்ச்சகர் தலையில் வைத்து கொண்டு வருவார். அதன்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அரங்கநாதர் சுவாமி சயனக் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கோவிந்தா முழக்கங்களுடன் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். கரோனா பரவல் காரணமாக ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்த பக்தர்கள் 750 பேர், இலவச தரிசனம் என்ற வகையில் 750 பேர் என ஒரு மணி நேரத்துக்கு ஆயிரத்து 500 பேர் வீதம் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல் ராசிபுரம்வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு உற்சவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் பக்தர்கள் காட்சி அளித்தார்.
மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலிலும், தலைமலை ஸ்ரீ சஞ்சீவிராயன் பெருமாள் கோவிலிலும், சேந்தமங்கலம் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி காலை 4. 45 மணிக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
நிகழாண்டு பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு கரோனா பொது முடக்க தடை விதிக்கப்பட்டதால் குறைந்தளவு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். காலை 6 மணிக்கு மேல் தான் அனைத்து பெருமாள் கோவில்களிலும் பரமபதவாசல் திறப்பு முடிந்து தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.