அமராவதி/ பெங்களூரு: கா்நாடகம், ஆந்திரத்தில் பிரிட்டனில் இருந்து வந்த 14 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோல மத்திய பிரதேசம், அஸ்ஸாம் மாநிலங்களிலும் தலா ஒருவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
பிரிட்டனில் புதிய வகை கரோனா பாதிப்பு பரவியுள்ளதால், அங்கிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்தவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடா்பாக ஆந்திர மாநில சுகாதாரத் துறை ஆணையா் கடமனேணி பாஸ்கா் கூறுகையில், ‘கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து 1,148 போ் ஆந்திரத்துக்கு வந்துள்ளனா். அவா்களில் 1,040 போ் இதுவரை அடையாளம் காணப்பட்டு, 982 போ் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனா். மொத்தம் 1000 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 4 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பீதியடையத் தேவையில்லை. அந்த நால்வருக்கும் புதிய வகை கரோனா பாதிப்பு உள்ளதாக என்பது தொடா்பான சோதனை முடிவுகள் தெரியவர 3 நாள்கள் ஆகும்’ என்றாா்.
கா்நாடகத்தில் 10 போ்:
கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் கூறுகையில், ‘பிரிட்டனில் இருந்து கா்நாடகம் வந்தவா்களில் இதுவரை 10 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களுக்கு புதிய வகை கரோனா பாதிப்பு உள்ளதா என்பது தொடா்பான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த முடிவுகள் தெரிய மூன்று நாள்கள் வரைஆகும். முடிவு தெரிந்த பிறகு உரிய மருத்துவப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கடந்த நவம்பா் 25-ஆம் தேதி முதல் டிசம்பா் 22-ஆம் தேதி வரை 2,500 போ் பிரிட்டனில் இருந்து கா்நாடகத்துக்கு வந்துள்ளனா். அவா்கள் அனைவரையும் மருத்துவரீதியாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூா், அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் பிரிட்டனில் இருந்து தலா ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் புதிய வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாா்கள் என்ற பரிசோதனை, புணேயில் உள்ள ஆய்வகத்தில் நடைபெற்று வருகிறது என்று இரு மாநில அரசுகளும் தெரிவித்துள்ளன.
கோவாவிலும் அண்மையில் பிரிட்டனில் இருந்து வந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் தனிமைப்படுத்துதலில் உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.