

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சோமம்பட்டியில், ஏரியைத் தூர்வாரி சீரமைத்து 2,000 மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிராம மக்கள் ஆர்வத்தோடு பங்கேற்று, மரக்கன்றுகள் நட்டு அசத்தினர். சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட சோமம்பட்டி ஊராட்சியில் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
5 ஆண்டுகளாக கழிவு நீரை வடிகட்டி பாய்ச்சி, மர தோட்டம் அமைத்துத் தொடர்ந்து பராமரித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, சோமம்பட்டி ஏரியில் 10 ஏக்கர் பரப்பளவு நிலத்தை, சோமம்பட்டி ஏரி வளர்ச்சிக்குழு, வாழப்பாடி அரிமா சங்கம், நெஸ்ட் அறக்கட்டளை உள்ளிட்ட தன்னார்வ இயக்கங்கள், சோமம்பட்டி ஊராட்சி நிர்வாகத்துடன் ஒன்றிணைந்து தூர்வாரி சீரமைத்தனர்.
இப்பகுதியில்,1,000 வெள்ளை வேல் மரக்கன்றுகள் மற்றும் இலுப்பை நீர்மருது நாவல் உள்ளிட்ட 1,000 பலன் தரும் மரக்கன்றுகள் உள்பட 2,000 மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, சோமம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் மகேஸ்வரன் வரவேற்றார்.
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் எஸ்.சதீஷ்குமார் மரக்கன்றுகள் நடும் விழாவைத் தொடக்கி வைத்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரேசன், வாழப்பாடி அரிமா சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன், ஜவஹர், கவிஞர்மன்னன், பன்னீர்செல்வன், சோமம்பட்டி ஏரி வளர்ச்சிக் குழு நிர்வாகி சிவா மற்றும் சோமம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஆர்வத்தோடு பங்கேற்று ஆளுக்கொரு மரக்கன்றுகளை நட்டு மரத்தோட்டம் அமைத்தனர். ஊர்கூடி மரக்கன்றுகள் நட்டு மரத்தோட்டம் அமைத்த சோமம்பட்டி கிராம மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.