பொங்கல் பரிசு வழங்க பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படாது: அமைச்சர் இரா.காமராஜ் 

பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தில், பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படமாட்டாது என தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார்.
பனங்குடி கிராமத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நேரடி வங்கிக் கடன்களை வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்
பனங்குடி கிராமத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நேரடி வங்கிக் கடன்களை வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்
Updated on
2 min read

பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தில், பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படமாட்டாது, பழைய முறையே பின்பற்றப்படுமென, நன்னிலம் அருகே செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசும்போது தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பனங்குடி கிராமத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் குழுக்களுக்கான நேரடி வங்கிக் கடன் மற்றும் வேளாண் உற்பத்தியாளர்களுக்கான சுழல் நிதியினை அமைச்சர் இரா.காமராஜ் வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது,

தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தற்போது அமல்படுத்தப்படும் பயோமெட்ரிக் முறையில் குறைபாடு உள்ளதால், பொங்கல் பரிசு பெறுவதில் மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளதே, எனக் கேட்டதற்கு, 

பொங்கல் பரிசு வழங்குவதில் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படாது. பழைய முறையிலேயே, ஸ்மார்ட் குடும்ப அட்டையை ஸ்கேன் செய்து, பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகையான ரூபாய் 2500 மற்றும் பொங்கல் தொகுப்புப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். எனவே பொங்கல் பரிசுத் தொகையினைப்  பெறுவதிலோ அல்லது பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருட்களைப் பெறுவதிலோ, பொதுமக்களுக்கு எவ்வித சிரமுமின்றி, வழங்குவதற்கு அரசின் சார்பில் தெளிவாக  உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். 

மேலும், தமிழகம் முழுவதும் இரண்டு கோடியே ஆறுலட்சம் குடும்ப அட்டைகளுக்குப் பொங்கல் பரிசு தொகுப்புப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதுவரை தமிழகம் முழுவதும், 1,96,532 சர்க்கரைக் குடும்ப அட்டைகள், அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிட விருப்பம் தெரிவிக்கப்பட்டு, மாற்றப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு பயோமெட்ரிக் திட்டம் நாடுமுழுவதும் செயல்பாட்டில் உள்ளது. அவ்வப்போது பயோமெட்ரிக் முறையில் சர்வர் பிரச்னை ஏற்படுகிறது. அவை அனைத்தும் சரி செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு பொருள்கள் வழங்குவதில் எவ்விதப் பிரச்னையும் இல்லாத வகையில் அவ்வப்போது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

திமுகவின் சார்பாக அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்குப் பதிலளிக்கும்போது, கடந்த காலங்களில் திமுகவினர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் குறித்த பட்டியல் தயாராக உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவது சிரிப்பைத் தான் ஏற்படுத்துகிறது. அதிமுகவினர் மீதுத் தெரிவிக்கப்படும் ஊழல் புகார்கள் தொடர்பாக, எங்கு வேண்டுமானாலும் துணிவுடன் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது எனத் தெரிவித்தார்.

பாஜக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று, பாஜக மேலிடத் தலைவர்கள் தான் அறிவிப்பார்கள் என்று மத்திய அமைச்சர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அறிவித்து வருகிறார்களே என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போது,

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம், அதிமுகவின் உயர்மட்ட அமைப்பான செயற்குழுவில், கட்சியின் அனைத்து முன்னணி தலைவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைகளுக்குப் பின்னர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். எனவே அதிமுக தலைமையிலான கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை எனப் பதிலளித்தார்.

முன்னதாக நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட பனங்குடி, ஆனைக்குப்பம், ஸ்ரீவாஞ்சியம், வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, நேரடி வங்கிக் கடன் மற்றும் வேளாண் உற்பத்தியாளர் குழுக்களுக்கு சுழல் நிதியினை அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ். ஆசைமணி, முன்னாள் எம்பி டாக்டர் கே.கோபால்,  நன்னிலம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயலட்சுமி குணசேகரன், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையத் தலைவரும், நன்னிலம் ஒன்றியக் குழு துணைத் தலைவருமான சி பி ஜி. அன்பு,  தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் இராம குணசேகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஏஎன்ஆர்.பன்னீர்செல்வம் மற்றும் அரசு அதிகாரிகளும், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com