ரஜினிகாந்த் இன்று மாலை வீடு திரும்புகிறார்: சத்தியநாராயணன் தகவல்

ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்புகிறார்
நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்



ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்புகிறார் என அவரது சகோதரர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஹைதராபாத்தில் திரைப்பட படப்பிடிப்பில் ரஜினிகாந்த் (70) கலந்துகொண்ட நிலையில், படப்பிடிப்பு ஊழியா்கள் 8 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து ரஜினிகாந்த் உள்பட படப்பிடிப்பில் பங்கேற்ற அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ரஜினிகாந்த்துக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இருந்தபோதும், அவருடைய ரத்த அழுத்தத்தில் மாறுபாடு காணப்பட்டதைத் தொடா்ந்து, ஹைதராபாத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவா்களின் தீவிர கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில், ‘அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அச்சப்படத் தேவையில்லை.’ ரஜினிக்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், அவருடைய உடல்நிலையில் பயப்படக் கூடிய அளவிலான பாதிப்புகள் எதுவும் தென்படவில்லை. அவருக்கு மேலும் சில மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

அவருடைய ரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கான சிகிச்சை கவனமுடன் அளிக்கப்பட்டு வருகிறது. அவா் முழுமையான ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளாா். பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அவருக்கு இதுவரை எடுக்கப்பட்டுள்ள முழுமையான ஆய்வுகளின் முடிவுகள், ரத்த அழுத்த நிலை ஆகியவற்றின் அடிப்படையிலேயே, அவரை மருத்துவமனையிலிருந்து எப்போது அனுப்புவது என்பது முடிவு செய்யப்படும் என்று மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்புவார் என அவரது சகோதரர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார். 

மேலும் ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவருக்கு எந்த பாதிப்புமில்லை என்று சத்தியநாராயணன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com