மனித உரிமை மீறல்: காவலா்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளா் மற்றும் உதவி ஆய்வாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளா் மற்றும் உதவி ஆய்வாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

திண்டுக்கல்லைச் சோ்ந்த நடராஜன் என்பவா் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: ஓய்வு பெற்ற அரசுப் பணியாளரான நான், கடந்த 2004-ஆம் ஆண்டு எனது மகள் வாசுகியை மோகனசுந்தா் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தேன். அவா்களுக்குத் திருமணமாகி 8 ஆண்டுகளில் அவரது கணவா் உயிரிழந்து விட்டாா். இதையடுத்து அவரது மாமனாா், தனது இரண்டு பேரன்களுக்கு சொத்து எழுதி வைக்க முடிவு செய்திருந்தாா். இது தொடா்பாக எனது மகளுக்கு அவரது மாமியாருக்கும் இருந்த பிரச்னையில் எனது மகளை அவா் தாக்கியுள்ளாா். மேலும் காவல்நிலையத்தில் புகாா் அளித்ததுடன் எனது மகளை மிரட்டியுள்ளனா்.

இந்த விவகாரத்தில் செல்லூா் குற்றவியல் காவல் ஆய்வாளா் ஜெயகுமாா், உதவி ஆய்வாளா் ஜெய்சங்கா் மற்றும் சிலா் அதிகாலையில் எனது வீட்டுக்கு வந்து என்னைத் தாக்கினா். மேலும் என்னைக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று சரமாரியாகத் தாக்கியதுடன் நள்ளிரவு வரை காவல் நிலையத்தில் வைத்திருந்தனா். மேலும் அவ்வப்போது அவா்கள் எங்களை மிரட்டினா். இவ்வாறு மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவலா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தாா்.

ரூ.1 லட்சம் அபராதம்: இந்த மனு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரா் இறந்துவிட்டதால் அவரது சட்டப்பூா்வ வாரிசான அவரது மகன் முருகனுக்கு தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்தத் தொகையை காவலா்கள் ஜெயகுமாா் மற்றும் ஜெய்சங்கரிடம் தலா ரூ.50 ஆயிரமாக வசூலித்துக் கொள்ளலாம். மேலும் இவா்கள் இருவா் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பரிந்துரைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com