ஈரோடு: கொடுமுடி அருகே காரணாம்பாளையம் என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை பகுதியை சுற்றுலாத் தலமாக்கும் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடியில் காவிரி ஆற்றை ஒட்டி உள்ள கிராமம் காரணாம்பாளையம். இதன் ஒரு கரை ஈரோடு மாவட்டம், கொளாநல்லி ஊராட்சிக்கு உள்பட்டது. மறுகரை நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தை அடுத்த மாரியம்பாடியில் உள்ளது. விடுமுறை, விசேஷ நாள்களில், காரணாம்பாளையம் ஆற்றுப் பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இயற்கை எழிலுடன் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள காரணாம்பாளையம் தடுப்பணை வெளியுலகின் எவ்விதத் தொல்லைக்கும் ஆளாகாத இடத்தில் கண்ணுக்கும், மனதுக்கும் விருந்தளிக்கிறது. காவிரியாறு சலசலக்கும் ஓசை, துள்ளி விளையாடும் மீன்கள், நீர்க்காகங்கள், கொக்குகள், நாரைகளின் ரீங்கார ஒலி ஆகியவை மட்டுமே இப்பகுதிக்குச் சொந்தமானவை.
ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் தடுப்பணை உள்ளதால் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். கொடுமுடி, ஊஞ்சலூர் ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு வரும் பக்தர்களும் பொழுதுபோக்குக்காக இந்தத் தடுப்பணைக்கு வந்து செல்கின்றனர்.
குடும்பத்துடன் வந்து பொழுதைக் கழித்துச் செல்ல இந்தத் தடுப்பணை சரியான தேர்வாக அமைவதால் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அணைக்கு வருகின்றனர். ஆனால், இப்பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. தவிர பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான நிலங்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். தடுப்பணைக்குச் செல்லும் படிக்கட்டுகள் அகலம் குறைவாக உள்ளதால், அணையைக் கண்டுகளிக்க வரும் பயணிகள் தடுமாறி கீழே விழுகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணை, கொடிவேரி அணை ஆகியவை பாதுகாப்புடன் சிறந்த சுற்றுலாத் தலங்களாகத் திகழ்கின்றன. அதேபோல, காரணாம்பாளையம் தடுப்பணை பகுதியில் பூங்கா, பாதுகாப்பாக ஆற்றில் குளிக்க வசதி, படகு சவாரி செய்ய வசதி, பெண்கள் உடைமாற்ற வசதி ஆகியவற்றுடன், போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டால் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக காரணாம்பாளையம் மாறும்.
கடந்த 2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கேளிக்கை வசதிகளுடன் கூடிய சுற்றுலாத் தலமாக காரணாம்பாளையத்தை தரம் உயர்த்தத் திட்டமிடப்பட்டது. இங்கு ஆய்வு நடத்திய அப்போதைய சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த சுரேஷ்ராஜன், உரிய பரிந்துரைகளை அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பின் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளர்கள் கூறியதாவது:
மறுகரையில் உள்ள ஜேடர்பாளையம் மாரியம்பாடியில் பூங்கா, திறந்தவெளி மைதானம் அமைத்து சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளனர். எனவே, பொதுமக்கள் அங்கு சென்று இயற்கையை ரசித்துச் செல்கின்றனர். இங்கு போதிய இடவசதி இல்லாததால் பூங்கா அமைக்கப்படவில்லை எனக் கூறி அதிகாரிகள் தட்டிக் கழிக்கின்றனர். மறுகரையில் இருக்கும் அளவுக்கு இங்கும் தாராளமாக இட வசதி உள்ளது. பூங்கா இல்லாவிட்டாலும், விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக வந்து செல்கின்றனர். தண்ணீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் வேறு வழியின்றி வந்தவுடனே விரைவாக சென்று விடுகின்றனர்.
பொதுமக்கள் இங்கு வந்து மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்லும் வகையில், பொழுதுபோக்கு வசதியுடன் கூடிய பூங்கா, திறந்தவெளி மைதானம், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தி காரணாம்பாளையத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து, சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இப்போது வரை அரசிடம் இருந்து பதில் ஏதும் இல்லை என்றனர்.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
விடுமுறை நாள்களில் ஈரோடு, கரூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் இங்கு வருகின்றனர். வாகனங்களை ஈரோடு - கொடுமுடி சாலையிலேயே நிறுத்திவிட்டுச் சென்றுவிடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இங்கு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கரையோரத்தில் பூங்கா, ஓய்வு அரங்கு, வாகனம் நிறுத்துமிடம் போன்றவற்றை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த இடம் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமானது. பொதுமக்களின் கோரிக்கை குறித்து ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


