சாத்தான்குளம் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு எடுக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்

சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் ஆஜராக வந்த திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. பிரவிண்குமார் அபினபு, காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் உள்ளிட்ட காவல் அதிகாரிகள்.
சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் ஆஜராக வந்த திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. பிரவிண்குமார் அபினபு, காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் உள்ளிட்ட காவல் அதிகாரிகள்.
சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் ஆஜராக வந்த திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. பிரவிண்குமார் அபினபு, காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் உள்ளிட்ட காவல் அதிகாரிகள்.
Published on
Updated on
2 min read

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது எனவும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு குறித்து விசாரணை நடத்த, கோவில்பட்டி நீதித்துறை நடுவருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு போலீஸார் ஒத்துழைக்க மறுப்பதாகவும், காவல் துறை அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்வதாகவும், தனது விசாரணையை விடியோ பதிவு செய்த தலைமைக் காவலர் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்றும் நீதித்துறை நடுவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளருக்கு மின்னஞ்சல் மூலம் அறிக்கை அனுப்பியிருந்தார். 

இதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் மற்றும் சாத்தான்குளம் காவல் நிலைய தலைமைக் காவலர் மகாராஜன் ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு, திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரதாபன், சாத்தான்குளம் காவல் நிலைய தலைமைக் காவலர் மகாராஜன் ஆகியோரை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் மூவரும் சென்னை  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் செவ்வாய்க்கிழமை ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் தூத்துக்குடி மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன், தலைமைக் காவலர் மகாராஜன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆஜராகினர். அவர்களுடன் திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவர் பிரவீண்குமார் அபினபு மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் ஆகியோரும் ஆஜராகினர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதிகள், இவ்வழக்கின் விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள நீதித்துறை நடுவரை, காவல்துறை அதிகாரிகள் அவமதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். 

அதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்,  மனஅழுத்தம் காரணமாகவே போலீஸார் தவறாக நடந்துகொண்டனர் எனக் கூறினார். மேலும் தூத்துக்குடி மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாகவும், தலைமைக் காவலர் மகாராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், நீதித்துறை நடுவரை அவமதித்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன், தலைமைக் காவலர் மகாராஜன் ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். போலீஸார் தரப்பில் வழக்குரைஞரை  நியமிக்க அவகாசம் கோரப்பட்டதால்,  4 வாரங்கள் அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

சிபிஐ விசாரணைக்கு எடுக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்: இதன்தொடர்ச்சியாக நடந்த விசாரணையில் நீதிபதிகள், முதல்நிலை பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களில் மோசமான காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் வழக்கின் நேரடி சாட்சியான தலைமைக் காவலர் ரேவதியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது. இவ்வழக்கில் வாக்குமூலம் அளித்துள்ள தலைமைக் காவலர் ரேவதிக்கு பாதுகாப்பளிக்க வேண்டும். அவர் விரும்பினால் விடுப்பில் செல்லவும் காவல்துறை அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கில் தடயங்களை மறைக்க வாய்ப்புள்ளதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்.

திருநெல்வேலி காவல் சரக துணைத்தலைவர் 3 மாவட்டங்களுக்கு பொறுப்பு என்பதாலும், தற்போது அவர் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பதாலும் திருநெல்வேலி சிபிசிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளர் அனில் குமார் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் இவ்வழக்கில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் இவ்வழக்கின் விசாரணையை ஒரு நொடி கூட தாமதிக்கக் கூடாது.  எனவே திருநெல்வேலி சிபிசிஐடி டிஎஸ்பி உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com