முழு ஊரடங்கு பகுதிகளில் கடைகள், ரேஷன் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு 

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்குள்ள கடைகளுக்கும் நேரக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு பகுதிகளில் கடைகள், ரேஷன் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு 


சென்னை: தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை ஒட்டியிருக்கும் மாவட்டங்களின் சில பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்குள்ள கடைகளுக்கும் நேரக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் கரோனா வைரஸ் நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, 15.6.2020 மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையிலும், அமைச்சரவைக் கூட்டத்தின் ஆலோசனையின் அடிப்படையிலும், பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005ன் கீழ், 19.6.2020 அதிகாலை முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு ;

  1. பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும்,
  2. திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,
  3. செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,
  4. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். 

இந்தப் பகுதிகளில் உள்ள பொது விநியோக கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். பொது விநியோகத் திட்டத்திற்கு தொடர்புடைய இந்திய உணவுக் கழகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகள் மற்றும் அதைச்சார்ந்த போக்குவரத்து அனுமதிக்கப்படும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பொது விநியோகக் கடைகள் இயங்காது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, அரசு அறிவித்த நிவாரணங்கள் அக்கடைப் பணியாளர்களால் நேரடியாக வழங்கப்படும்.

காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். 

அதே போல் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள், வாகனங்களை பயன்படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே, அதாவது 2 கி.மீ தொலைவிற்குள் மட்டும் சென்று, பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது. தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைக்கு அனுமதி வழங்கப்படும். அப்பொருட்களை வழங்கும் ஊழியர்கள், தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடம் இருந்து அடையாள அட்டை பெற்று பணியாற்ற வேண்டும்.

அம்மா உணவகங்கள் மற்றும் ஆதரவற்றோருக்காக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com