தினமணி இணையதள செய்தி எதிரொலி: சுத்தமாகிறது கூத்தாநல்லூர் பாசன வாய்க்கால்!

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பாசன வாய்க்காலில், பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படவில்லை என்ற செய்தியை, தினமணி டாட்காமில் படத்துடன் வெளியிடப்பட்டது. 
ஆய்வுப் பணியில் நகராட்சி ஆணையர் லதா
ஆய்வுப் பணியில் நகராட்சி ஆணையர் லதா

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பாசன வாய்க்கால், பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் கிடப்பது பற்றி தினமணி இணையதளத்தில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, வாய்க்காலைப் பார்வையிட்டு சுத்தம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார் நகராட்சி ஆணையர் லதா.

இணையதளத்தில் வெளியான செய்தியைப் பார்த்த நகராட்சி ஆணையர் லதா , பாசன வாய்க்காலை நேரில் பார்வையிட்டார்.

கூத்தாநல்லூரின் பிரதான ஆறு வெண்ணாறு. இந்த வெண்ணாற்றில் நகராட்சி 13 ஆவது வார்டில், தடுப்பணை உள்ளது. சித்தார் என்ற வாய்க்காலுக்காக, ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இணைப்புப் பாலம் உள்ளது. இந்த தடுப்பணையும் பழுதாகி, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாசன வாய்க்கால் கவனிப்பாரற்று, தூர்ந்து போய் உள்ளது. 

வாய்க்கால் முழுக்க காட்டாமணக்குச் செடிகளும், புற்களும் மண்டி மரமாகவே வளர்ந்து காடு போலக் காட்சியளிக்கிறது. இப்பாசன வாய்க்காலில் வெண்ணாற்றிலிருந்து தண்ணீர் வருவதற்கு வாய்ப்பே இல்லாமல் இருந்தது. இதுபற்றிய செய்தி, தினமணி இணைய தளத்தில் கடந்த 5ஆம் தேதி வெளியானது. 

இச்செய்தியைப் பார்த்த நகராட்சி ஆணையர் ஆர்.லதா, நகராட்சி ஊழியர்கள் வாசுதேவன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டனர். சுட்டெரிக்கும் வெய்யிலில், கரடு, முரடான பாதையில், சென்ற ஆணையர் லதா வெண்ணாற்றின் தடுப்பணைப் பகுதியையும் பார்வையிட்டார். தடுப்பணை முழுவதுமாக மூடப்பட்டிருப்பதையும், பாசன வாய்க்காலில் மண்டிக் கிடக்கும் மரம், செடி, கொடிகளையும் பார்வையிட்டார். 

உடன், வெண்ணாற்றுப் பகுதியிலிருந்தும், பாலத்திலிருந்து மேல் கொண்டாழி பாசன வாய்க்கால் மற்றும் வாய்க்கால் கரையின் இரண்டு பக்கங்களிலும் முட்புதர்களையும், செடிகளையும் அகற்ற உத்தரவிட்டார். வாய்க்காலில் குவிந்துள்ள கழிவுகளையும் குப்பைகளையும் அகற்ற உத்தரவிட்டார். 

தொடர்ந்து, இது குறித்து ஆணையர் லதா கூறியது:

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு, தற்போது சேதமடைந்துள்ள, மன்னார்குடி - வடபாதிமங்கலம் இணைப்பு பாலத்தின், தடுப்புச் சுவரைக் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றார். மேலும், அப்பகுதியில் உள்ள நகராட்சியின் அடிகுழாயில் தண்ணீர் வருகிறதா எனவும் அப்பகுதி மக்களிடம் விசாரித்தார். குழாயை உடனே பழுது பார்க்கவும் உத்தரவிட்டார். 

இந்த பாசன வாய்க்கால் சுத்தம் செய்யப்பட்டு, தடுப்பணையைத் திறந்துவிட்டால், வெண்ணாற்றுத் தண்ணீர் இப்பகுதியில் வருவதால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்ய பெரும் பயனாக இருக்கும். மேலும், பாண்டுக்குடி, வாக்கோட்டை, தென்கோவனூர், கூப்பாச்சிக்கோட்டை, கோட்டகச்சேரி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கும் பெரும் பயனாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com