ஆம்பூர் வனச் சரக காப்புக் காட்டில் உயரமான மலைக் கோட்டை: சாலை வசதி ஏற்படுத்தினால் சுற்றுலாத் தலமாகும் வாய்ப்பு

ஆம்பூர் வனச்சரக காப்புக்காட்டில் உயரமான மலை மீது மல்லப்ப நாயக்கர் அரசால் மாதகடப்பா கோட்டை கட்டப்பட்டுள்ளது. இப்பகுதியை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆம்பூர் வனச் சரக காப்புக் காட்டில் உயரமான மலைக் கோட்டை: சாலை வசதி ஏற்படுத்தினால் சுற்றுலாத் தலமாகும் வாய்ப்பு
Updated on
2 min read

ஆம்பூர்: ஆம்பூர் வனச்சரக காப்புக்காட்டில் உயரமான மலை மீது மல்லப்ப நாயக்கர் அரசால் மாதகடப்பா கோட்டை கட்டப்பட்டுள்ளது. இப்பகுதியை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆம்பூர் வனச்சரக காப்புக் காடுகளையொட்டி, ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்ட கெüண்டன்யா வன விலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த மலைப் பகுதியில் இந்தக் காப்புக் காடுகள் உள்ளன.

ஆண்டு முழுவதும் வற்றாத நீர் ஆதாரமாகத் திகழும் பெருங்கானாறு (பெத்தவொங்கா) இந்த இரு மாநில காப்புக் காடுகளை எல்லையாய் இருந்து பிரிக்கிறது. ஆம்பூருக்கு மேற்கே உள்ள வனச்சரக காப்புக் காடுகளில் முக்கியமான மூன்று மலைக் கோட்டைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மாதகடப்பா மலை மீது மல்லப்பநாயக்கர் கட்டிய மலைக் கோட்டை உள்ளது. ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் மலை மீது மலைக்கோட்டை அமைந்துள்ளது. இதேபோல் உமர்ஆபாத் அருகே கைலாசகிரி மலை மீது ஆற்காடு நவாப் காலத்தில் கட்டப்பட்ட மலைக்கோட்டை உள்ளது. இந்த மூன்று மலைக் கோட்டைகளும் ஆம்பூர் வனச்சரகப் பகுதியிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆம்பூர் வனச்சரக காப்புக் காடுகளில் ஆந்திர மாநிலத்தையொட்டி அமைந்துள்ளது மாதகடப்பா மலைக்கிராமம். அதன் அருகே இந்த மலைக் கோட்டை இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,000 அடி உயரத்தில் இக்கோட்டைக்கு கீழிருந்து செல்ல நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. 

மலையின் மேலே சென்றால் முதலில் அமைந்திருப்பது முறையாக கட்டப்பட்ட மதில் சுவர். கோட்டையைச் சுற்றி மலை முழுவதும் மதில் சுவர் உள்ளது. உள்ளே கருங்கற்களால் உருவாக்கப்பட்ட மற்றொரு மதிலும் உள்ளது. மலையைச் சுற்றிலும் இந்த இரண்டு மதில் சுவர்களும் முறையாக அமைக்கப்பட்டுள்ளன.

கோட்டைக்குச் செல்லும் வழியில் இடது புறத்தில், கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் வீரர்கள் தங்குவதற்கான பார்வை கோபுரம் அமைந்துள்ளது. இதன் உள்ளே பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட அறையும், அந்த அறைக்குள் பாறைகளால் உருவாக்கப்பட்ட கட்டிலும் உள்ளன. மலையின் மேலிருந்து கீழே நடப்பதைக்  கண்காணிக்க அந்தப் பாறை குகை அமைந்துள்ளது.

பாறை குகையைக் கடந்து செல்லும் வழியில் வலது பக்கத்தில் வற்றாத குளம் உள்ளது. ஆண்டு முழுவதும் இந்த குளத்தில் தண்ணீர் வற்றியதே இல்லை என்று கூறப்படுகிறது.

கோட்டை பகுதியின் உள்ளே இருக்கும் பஞ்சமுக நந்தீஸ்வரர் கோயிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட விழா நிகழ்ச்சிகளுக்கு இந்த குளத்தின் நீரையே பயன்படுத்துகின்றனர். கோடைக் காலத்திலும் இந்தக் குளத்தின் நீர் வற்றாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம் உள்ளது. குளத்தை சுற்றிலும் உள்ள அடர்ந்த மரங்களே குளத்தின் நீர் ஆவியாகாமல் இருக்க உதவுகின்றன.

குளத்தைத் தாண்டி மேலே சென்றால் முழுக்க முழுக்க பாறைகளை வெட்டி எடுத்து, கட்டப்பட்ட பஞ்சமுக நந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோயிலை மிகப்பெரிய அளவில் கட்டி முடிக்க மலையின் கீழே பாறைகள் வெட்டப்பட்ட தூண்கள் இன்றளவும் காட்சிப்பொருளாக இருப்பதன் மூலம் இது உறுதியாகிறது.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயில் கட்டப்பட்டதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கோயிலின் உள்ளே பஞ்சமுக நந்தீஸ்வரர் மூலவராக இருந்து காட்சியளிக்கிறார். கோயிலின் இடதுபுறத்தில் வள்ளி தெய்வானை சமேதராய் சுப்பிரமணிய சுவாமி காட்சியளிக்கிறார். கோயிலின் வலதுபுறத்தில் முழுமுதற் கடவுளான விநாயகர் காட்சியளிக்கிறார். கோயிலின் உள்பிரகாரத்தில் சுற்றி வரும் போது சிவபெருமான், விஷ்ணு, அம்மன் சிலைகளை தனித்தனி பிரகாரங்களில் அமைத்துள்ளனர். 
பாறைக் கோயிலின் பக்கத்தில் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட கோயிலும் உள்ளது. இந்தக் கோயிலில் மூலவர் விக்கிரகத்தை பல ஆண்டுகளுக்கு முன் சமூக விரோதிகள் திருடிச் சென்று விட்டனர். மூலவர் இல்லாத கோயிலாக இது உள்ளது. கோயிலுக்குள் புதையல் இருப்பதாக எண்ணி சிலர் அதைச் சேதப்படுத்தியுள்ளனர்.

பஞ்சமுக நந்தீஸ்வரர் ஆலயத்துக்கு வடக்கே ஒரு வற்றாத சுனை உள்ளது. மரங்களின் அடியில் உள்ள இந்தச் சுனையில் உள்ள நீரையே விழாக் காலங்களில் குடிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். 
மலைக் கோட்டையின் மதில் சுவரில் இருந்து மேற்கே பார்த்தால் மேற்கே ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலப் பகுதிகள் தெரிகின்றன. தெற்கு, கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் தமிழகத்தின் எல்லைப் பகுதிகள் தெரிகின்றன. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் (வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை) இந்த மலைக் கோட்டைதான் உயரமான மலைக்கோட்டை என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மலை மீதுள்ள சுட்ட செங்கற்களால் ஆன கோயிலைக் கட்டும் பணிக்காக மலையின் கீழ் அந்தக் காலத்திலேயே பயன்படுத்தப்பட்ட செங்கல் சூளை உள்ளது. சூளைப் பணி, கோட்டைகளை கட்டும் பணி, கோயில்களை அமைக்கும் பணி ஆகியவற்றுக்கு மலையின் கீழே உள்ள துருகம் ஏரியில் இருந்த நீரைப் பயன்படுத்தியுள்ளனர். இன்று இந்த ஏரி வன விலங்குகள், பறவைகள் மற்றும் கால்நடைகளின் தாகம் தீர்த்து வருகிறது.
துருகம் ஏரிக்கு மேற்கே மாதகடப்பா மலை கிராமத்துக்கு கிழக்கே தாமரைக் குட்டை உள்ளது. இதிலும் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதாகக் கூறுகின்றனர். தாமரைக் குட்டையின் அருகே வன தெய்வத்தை பாறையில் புடைப்புச் சிற்பமாக வடித்து ஒவ்வொரு ஆண்டும் வழிபட்டு வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

மாத கடப்பா மலைக் கோட்டையும் , ஏரிகளும், கோயில்களும் கோட்டை கொத்தளங்களும் முழுக்க முழுக்க ஆம்பூர் வனச்சரகப் பகுதியில் அமைந்துள்ளது. அதனால் கோட்டைக்கும் கோயிலுக்கும் செல்ல முறையான சாலை வசதி கிடையாது.

மலை மீதுள்ள கோட்டைக்கும் கோயிலுக்கும் செல்ல முறையாக சாலை வசதி அமைத்து, அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தால் தமிழகம், ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநில மக்களின் முக்கிய சுற்றுலாத் தலமாக இந்த மலைக்கோட்டை மாறும் என்பதில் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com