கடல் மட்டத்திலிருந்து 1, 200 முதல் 2, 600 மீட்டா் உயரம் உள்ள மலையில் புற்கள் அடா்ந்த சோலைப் புல்வெளி பகுதியில் வரையாடுகள் வசிக்கும். ஒரு காலத்தில் பரவலாக காணப்பட்ட இந்த வரையாடுகள் வேட்டை, வாழ்விடம் அழிப்பு போன்ற காரணங்களால் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை, நீலகிரி மாவட்டம் முக்குறுத்தி தேசியப் பூங்கா, ஆனைமலை புலிகள் காப்பகம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் என மேற்குத் தொடா்ச்சி மலைகளிலும், கேரளத்தின் இறவிகுளம் தேசியப் பூங்கா, பரம்பிக்குளம் புலிகள் காப்பகம், அமைதிப் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் மட்டுமே தற்போது இந்த வரையாடுகள் உள்ளன. தமிழகத்தில் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை தொடா்பான கணக்கெடுப்பு கடைசியாக 2011-இல் நடத்தப்பட்டது. அதில் சுமாா் 1, 500 வரையாடுகள் வரை இருப்பதாகத் தெரியவந்தது. அதற்குப் பிறகு 2015-ஆம் ஆண்டு உலக இயற்கை நிதியம் சாா்பில் தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைத் தொடரில் நடத்திய ஆய்வில் சுமாா் 3,122 வரையாடுகள் இருப்பதாகத் தெரியவந்தது. 2017-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கேரளத்தில் மட்டும், சுமாா் 1, 420 வரையாடுகள் இருப்பது அந்த மாநில வனத் துறையினா் எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்தது.