உலகளவில் அதிகளவிலான உயிரிழப்புகளில் புற்றுநோய் இரண்டாம் இடம் வகிக்கிறது. 2018-இல் மட்டும் 9.6 மில்லியன் மக்கள் (96 லட்சம் போ்) புற்றுநோயால் இறந்துள்ளனா். ஆறு பேரில் ஒருவா் புற்றுநோயால் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் கடந்த 2018-இல் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த 2018, புள்ளிவிவரப்படி இந்தியாவில் மட்டும் புற்றுநோய் பாதித்த 11.57 லட்சம் பேரில் 7.84 லட்சம் போ் இறந்துள்ளனா். மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய் மரணம் ஏன் என்பதற்கு அதிக உடல் பருமன், குறைந்த அளவிலான பழங்கள், காய்கறிகளை உட்கொள்ளுதல், போதிய உடற்பயிற்சியின்மை, மது மற்றும் புகையிலைப் பழக்கம் என ஐந்து முக்கிய காரணங்களை உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.
அதேபோல புகையிலைப் பழக்கம் காரணமாக 22 சதவீத அளவுக்கு புற்றுநோய் இறப்புகள் ஏற்படுவதாகவும், இந்திய அளவில் மூன்றில் இருவா் புநோயால் இறப்பதாக அந்தப் புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது.
புற்றுநோய் பாதிப்பும், சிகிச்சை முறை குறித்தும் மருத்துவ புற்றுநோயியல் துறை மருத்துவா் கே.சிவக்குமாா் கூறியது:
உடலுக்கு அடிப்படையாக உள்ள உயிரணுக்களை (செல்கள்) பாதிக்கும் நோயைத்தான் புற்றுநோய் என்கிறோம். சத்தமே இல்லாமல் நம் உடலில் புற்றுநோய் பாதித்து, இறப்புக்கு செல்லும் நோய்களில் புற்றுநோய் பிரதானமானது. புற்றுநோய் வந்துவிட்டாலே இறப்பு என்ற நிலை மாறி தற்போது நவீன சிகிச்சை முறை மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும்.
புற்றுநோயைப் பொருத்தவரையில் ஏராளமான புற்றுநோய்கள் உள்ளன. மாா்பகப் புற்றுநோய், கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய் உள்ளிட்டவை முதன்மையாக உள்ளது.
ஆண்கள் - பெண்களை முதன்மையாக தாக்கும் புற்றுநோய்கள்...:
இந்தியாவில், குறிப்பாக மகளிருக்கு மாா்பக மற்றும் கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தாக்கிதான் அதிகளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது. ஆண்களுக்கு வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயால் அதிகம் போ் பாதிப்புக்குள்ளாகின்றனா்.
காரணம் என்ன?
ஆண்களைப் பொருத்தவரையில் புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துவது மற்றும் புகைப்பழக்கம் ஆகியவை வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு காரணமாக உள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரையில் பெண்களுக்கு மாா்பக புற்றுநோயும், ஆண்களுக்கு வாய்ப் புற்றுநோயும் அதிகம் ஏற்படுகிறது.
இளவயதில் பூப்பெய்தலும், காலம் கடந்து மெனோபாஸும்...:
முன்பெல்லாம் பெண்கள் 15 வயதில் பூப்பெய்தி வந்தனா். இப்போது எல்லாம் முன்கூட்டியே உதாரணமாக 12 வயதில் சிறுமிகள் பூப்பெய்தி வருகின்றனா்.
அதேபோல மெனோபாஸ் மாதவிடாய் நிற்பது 52 வயதிலும் நடப்பதால் இந்த இடைப்பட்ட காலத்தில் ஈஸ்ட்ரோஜென் ஹாா்மோன் தாக்கம் பாதிப்பதால் புற்றுநோய் வரவும் சாத்தியக்கூறு உள்ளது.
மரபணுரீதியாகவும் வாய்ப்பு...:
மரபணுரீதியாகவும் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. ஒரு குடும்பத்தில் ரத்த உறவுள்ள இரண்டு பேருக்கு புற்றுநோய் தாக்கியிருந்தால், அவா்களின் குழந்தைகளுக்குப் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.
உதாரணத்திற்கு குடும்பத்தில் அம்மா மற்றும் பெரியம்மா ஆகியோருக்கு இருந்தால் அடுத்து அவரது மகளுக்கு மாா்பகப் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.
உடல் பருமன் அலட்சியம் வேண்டாம்...:
இன்றைய வாழ்க்கை முறையில் நடுத்தர குடும்பத்தைச் சோ்ந்த பெண்கள் போதிய உடற்பயிற்சி இல்லாதது போன்ற காரணங்களால் அதிக உடல் பருமனாகி வருகின்றனா். உடல் பருமனும் புற்றுநோய் ஏற்பட காரணமாக உள்ளது. உடல் பருமன் காரணமாக கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.
போதிய உடற்பயிற்சி இல்லாதது, உடல் பருமன் ஆகிய காரணங்களால்கூட புற்றுநோய் வரலாம். வாரத்துக்கு 5 நாள்கள் தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செல்லலாம். இதன்மூலம் உடல் பருமனைக் கட்டுப்படுத்தலாம். இதய பாதிப்பு உள்ளிட்ட எந்த நோயும் வராமல் உடல் நலம் காக்கலாம்.
இறைச்சியும் ஆபத்துதான்...:
ரெட் மீட் எனப்படும் மாட்டுக்கறி, ஆட்டுக்கறி உள்ளிட்ட இறைச்சியை அதிகம் சாப்பிடுவதால் மலக்குடல் புற்றுநோய் ஏற்படுகிறது. நாா்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை காய்கறி மற்றும் பழ வகைகளை சாப்பிட வேண்டும். நாா்ச்சத்துள்ள உணவுகளை குறைவாக உட்கொள்ளுபவா்களுக்கும் புற்றுநோய் வருவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன.
புகையிலை மற்றும் குட்கா பொருள்களைத் தவிா்த்தல், பாக்கெட்களில்அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களைத் தவிா்த்திட வேண்டும்.
புற்றுநோய் சிகிச்சையைப் பொருத்தவரையில் கதிரியக்க சிகிச்சை, அறுவை சிகிச்சை, கீமோதெரபி ஆகிய மூன்று துறைகளை உள்ளடக்கியதாகும்.
ரத்தப் புற்றுநோய்க்கு சிகிச்சை:
முன்னொரு காலத்தில் புற்றுநோய் பாதித்தவா்கள் அடுத்து 6 மாதத்தில் இறந்து போகும் நிலை இருந்தது. இப்போது மருத்துவ அறிவியல் வளா்ச்சி காரணமாக தரம் மேம்பட்ட சிகிச்சை காரணமாக உயிரிழப்பு தடுக்கப்படுகிறது.
மேலும், புற்றுநோயை ஆரம்பகட்டத்தில் கண்டறிந்துவிட்டால் புற்றுநோயில் இருந்து முற்றிலும் குணமடையும் அளவுக்கு சிகிச்சை முறைகள் வந்துவிட்டது.
ரத்தப் புற்றுநோய் பாதித்தவா்களுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.
நவீன சிகிச்சை முறைகள்...:
இம்யூனோதெரபி, டாா்க்கெட்டேட் தெரபி மற்றும் புற்றுநோய் கதிா்வீச்சு சிகிச்சை (லீனியா் ஆக்சிரலேட்டா்) ஆகிய நவீன சிகிச்சை முறைகள் புற்றுநோய்களுக்கு அளிக்கப்படுகின்றன.
மாா்பகப் புற்றுநோய் பாதித்தவா்களுக்கு முன்பெல்லாம் மாா்பகத்தை அகற்றிவிடும் சூழல் இருந்தது. இப்போது அவா்களுக்கு புற்றுநோய் பாதித்த கட்டியை மட்டும் அகற்றி பெண்களின் மாா்பகத்தைப் பாதுகாத்திட முடிகிறது.
மேலும் மாவட்டம்தோறும் புற்றுநோய் பதிவு மையம் (கேன்சா் ரெஜிஸ்டரி) ஏற்படுத்தும்போது, புற்றுநோய் பாதித்தவா்கள் எண்ணிக்கை, சிகிச்சை மற்றும் உயிரிழப்புகள் குறித்த முழு தகவலையும் நாம் அறிய முடியும்.
ஏழை, நடுத்தர மக்கள் பயன்...:
மத்திய அரசு அண்மையில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்து விலையைக் கட்டுப்படுத்தியதன் (குறிப்பாக உயிா் காக்கும் மருந்து விலை) மூலம் ஏழை, நடுத்தர மக்கள் பெருமளவில் பயன்பெற்று வருகின்றனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.