மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இந்திய ரயில்வேயில் முதன்முறையாக 1,280 பெண்கள் தேர்வு

இந்திய ரயில்வேயின் கடினமான ரயில் என்ஜின் லோகோ பைலட் பணியிடங்களில் பெண்கள் தற்போது  அதிக அளவில் சேர்ந்து,  தடம் பதிக்க உள்ளார்கள். இந்திய ரயில்வேயில் ஓர் ஆண்டில்  முதன்முறையாக 1,280

News image
Updated On :22 மார்ச் 2020, 9:59 pm

மு. வேல்சங்கர்


சென்னை: இந்திய ரயில்வேயின் கடினமான ரயில் என்ஜின் லோகோ பைலட் பணியிடங்களில் பெண்கள் தற்போது அதிக அளவில் சேர்ந்து, தடம் பதிக்க உள்ளார்கள். இந்திய ரயில்வேயில் ஓர் ஆண்டில் முதன்முறையாக 1,280 பெண்கள் என்ஜின் உதவி லோகோ பைலட் ஆக தேர்வாகியுள்ளார்கள். இவர்கள் வருகையின் மூலமாக, வரும் ஆண்டுகளில் இந்த கடின பணியில் சேரும் பெண்கள் எண்ணிக்கை மேலும் உயரும் என்று ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஆணுக்குப் பெண் சரி நிகர் என்பதை அனைத்துத் துறைகளிலும் தடம் பதித்து சாதனைகளை நிகழ்த்துவதன் மூலம் பெண்கள் நிரூபித்து வருகிறார்கள். கலை, இலக்கியம், அரசியல், விளையாட்டு, பாதுகாப்புப் பணி, சாகசங்கள் செய்வது என அனைத்திலும் சாதித்த இந்தியப் பெண்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். இதுபோல, விமானங்கள், லாரிகள், பேருந்துகள் இயக்கி சாதித்து வருகிறார்கள். அந்த வகையில், இந்திய ரயில்வேயில் கடினமான ரயில் என்ஜின் லோகோ பைலட் பணியிடங்களில் தற்போது அதிக அளவில் பெண்கள் சேர்ந்து, தடம் பதிக்க உள்ளார்கள்.

86,500 பெண் பணியாளர்கள் : நாடு முழுவதும் 3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதிவில்லாத பயணிகள் ரயில், 5,000 மின்சார ரயில்கள் என்று மொத்தம் 13,100 ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் சராசரியாக 2 கோடியே 30 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இந்தப் பயணிகளுக்கு சேவை புரிவதற்காக, ஏராளமான ஊழியர்கள் ரயில்வேயில் பணிபுரிகின்றனர். இந்திய ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளில் 12 லட்சத்து 50 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 1,585 உயர் அதிகாரிகள், 18,407 கடை நிலை ஊழியர்கள், இதரப் பிரிவுகளை சேர்ந்த 66,508 ஊழியர்கள் என 86,500 பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில், கடினமான ரயில் என்ஜின் லோகோ பைலட் பணியிடங்களில் குறைவான பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்தப் பணியில் ஒரே இடத்தில் நிலையாக வேலை முடியாத நிலை, குடும்பத்தைக் கவனிக்க முடியாத சூழல் போன்ற காரணங்களால் குறைந்த அளவில் பெண்கள் விண்ணப்பித்து வந்தார்கள்.

இந்தப் பிரிவில் அதிக அளவில் பெண்கள் வர வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் கருதியது.

1,280 பெண்கள் தேர்வு: இந்நிலையில், இந்திய ரயில்வேயின் கடினமான ரயில் என்ஜின் லோகோ பைலட் பணியிடங்களில் பெண் பணியாளர்கள் அதிக அளவில் சேர்ந்து, தடம்பதிக்க உள்ளார்கள். அதன்படி, ரயில்வேயில் முதன்முறையாக ஓர் ஆண்டில்1,280 பெண்கள் என்ஜின் உதவி லோகோ பைலட்டாக தேர்வாகி உள்ளார்கள்.

தமிழகத்தில் 43 பெண்கள் தேர்வு:

பொதுவாக, ரயில்கள், விமானங்கள், லாரிகள், ஆட்டோக்கள் ஓட்டும் பணிகளில் குறைந்த அளவிலேயே பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் பணிகள் கடினமானவை என்பதே இதற்கு காரணம். இந்தச் சூழலில் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சார்ந்த 1,280 பெண்கள் ரயில் என்ஜின்கள் ஓட்டும் பணியான உதவி லோகோ பைலட் வேலைக்கு தற்போது தேர்வாகி இருக்கிறார்கள். இதில், உத்தரப் பிரதேசத்தில் 216 பேர், மேற்கு வங்கத்தில் 110 பேர், கேரளத்தில் 145 பேர், ஆந்திரத்தில் 131 பேர், பிகாரில் 122 பேர், மகாராஷ்டிரத்தில் 117 பேர் தேர்வாகியுள்ளனர். குஜராத், அஸ்ஸாம், பஞ்சாப், ஹிமாசலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் ஒற்றை இலக்கத்திலும், தமிழகத்தில் 43 பேரும் தேர்வாகியுள்ளனர்.

ரயில்வே என்ஜின் லோகோ பைலட் பணியிடங்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தேர்வாகியிருப்பது இந்தியாவில் இதுவே முதல்முறையாகும்.

இந்த ஆண்டு இறுதியில் பணியில் சேர்வார்கள்:

21 ரயில்வே தேர்வாணையங்கள் மூலம் 17,673 லோகோ பைலட்டுகள் பணியிடங்களை நிரப்ப, 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தெற்கு ரயில்வேயின் சென்னை, திருவனந்தபுரம் தேர்வாணையங்களில் 528 பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பும் அதில் இடம்பெற்றன. கடந்த 2019-ஆம் ஆண்டு நாடு முழுவதும் இதற்கான தேர்வுகளும் நடந்து முடிந்தன. இதில், தேர்வான இந்த பெண்கள். பயிற்சி முடித்து இந்த ஆண்டு இறுதிக்குள் பணியில் இணைந்து விடுவார்கள்.

பெண்கள் எண்ணிக்கை உயரும்: இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: இந்திய ரயில்வேயில் 5,500 டீசல் என்ஜின்கள், 5,800 மின்சார என்ஜின்கள் உள்பட 11,300 ரயில் என்ஜின்கள் பயன்பாட்டில் உள்ளன. இவைகளை இயக்க ஒரு லட்சத்து 6 ஆயிரம் லோகோ பைலட்டுகள் பணியாற்றுகிறார்கள். இரவு, பகல் பாராமல் பணியாற்றும் கடினமான தொழில்நுட்பப் பணி இது. இந்தப் பணியில் சேர மூன்று கட்ட தேர்வுகளைச் சந்திக்க வேண்டும். அதன்பிறகு, பயிற்சி முடித்து, பணியில் சேர்வார்கள். தற்போது 1,280 பெண்கள் தேர்வாகியுள்ளனர். வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்றனர்.

கழிப்பறை வசதியை உருவாக்க வேண்டும்:

இது குறித்து தட்சிண ஊழியர்கள் சங்க மாநில துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் கூறியது: கடந்த 3 ஆண்டுகளில் தொழில்நுட்பம் சார்ந்த ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் 2 கோடியே 79 லட்சத்து 60 ஆயிரத்து 224 பேர். இதில், பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் 46 லட்சத்து 76 ஆயிரத்து 928 பேர். இதில் பணிமனைகள், தொழிற்சாலைகள், ரயில் நிலையங்களில் பணியாற்றவே அதிகம் விண்ணப்பித்தார்கள். பெண்கள் லோகோ பைலட்டுகளாகப் பணியாற்றினால் ஒரே இடத்தில் பணியாற்றவோ சராசரி பெண்களைப் போல குடும்பம், குழந்தைகளைக் கவனிக்கவோ இயலாது. நீண்ட தொலைவுக்கு ரயில் இயக்க வேண்டி வரும். 3 முதல் 5 நாள்கள்வரை பயணிக்க வேண்டி வரும். இதனால், இந்தப் பணிக்கு குறைவாகவே அவர்கள் விண்ணப்பித்து வந்தார்கள். அப்போது கூட ஒரு சில பெண்கள் மட்டுமே துணிச்சலாக இந்த வேலையை தேர்வு செய்தார்கள். இதனால், பெண் லோகோ பைலட்டுகள் எண்ணிக்கை சராசரியாக ஒரு ரயில்வே மண்டலத்துக்கு 20-ஐக்கூட தாண்டாத நிலை இருந்தது.

தற்போது இந்நிலை மாறியுள்ளது. இது வரவேற்கத்தக்கது. நல்ல மாத வருமானம், நிரந்தர அரசு உத்தியோகம் போன்ற காரணங்களால் இளம் பெண்கள் துணிந்து இந்த வேலையில் சேர தற்போது ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார்கள். அதிகரித்து வரும் பெண் லோகோ பைலட்டுகள் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு இந்திய தொழில்நுட்பக் கழகம், ரயில்வேயில் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு நிறுவனங்கள் துணையுடன் கழிப்பறை வசதியை என்ஜின்களில் உடனடியாக உருவாக்க வேண்டும். மேலும், ஓய்வு எடுக்கும் அறைகளில் வசதிகளை விரிவுபடுத்த வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.