திருப்பூரில் உணவின்றி தவிக்கும் வடமாநில தொழிலாளர்கள்

திருப்பூரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் 95 பேர் உணவு இல்லாமல், செலவுக்கு பணம் இல்லாமலும் குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர்.
திருப்பூரில் உணவின்றி தவிக்கும் வடமாநில தொழிலாளர்கள்
Updated on
1 min read

திருப்பூரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் 95 பேர் உணவு இல்லாமல், செலவுக்கு பணம் இல்லாமலும் குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர்.

திருப்பூர் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பிகார்,மேற்கு வங்கம், ஒடிஸா, தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி விட்டு சொந்த ஊருக்குச் செல்லமுடியாமல் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களே உணவு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், பிகார், ஒடிஸா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 95 பேர் மங்கலம் சாலையில் உள்ள பெரியாண்டிபாளையம் பிரிவில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கு சேர வேண்டிய வார சம்பளம் மட்டும் சம்மந்தப்பட்ட நிறுவனத்தால் கடந்த வாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பளத்தை வைத்து தொழிலாளர்கள் ஒரு வரத்தைக் கடத்தி விட்டனர். ஆனால் தற்போது அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பிகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் கூறியதாவது: பிகார், ஒடிஸா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 95 பேர் மங்கலம் சாலையில் உள்ள கோழிப்பண்ணை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளோம். மேலும், பெரியாண்டிபாளையம் பிரிவில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தோம். எங்களுக்கு கடந்த வாரம் வரையில் வேலை செய்த சம்பளம் வழங்கப்பட்டது. இதை வைத்து ஒரு வாரம் செலவு செய்து விட்டோம். தற்போது அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள்  இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம்.

இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் கேட்டபோது ஏற்கெனவே அனுப்பட்ட சரக்கிற்கு பணம் வரவில்லை என்றும், ஆர்டர் கேன்சலாகி விட்டதால் நஷ்டத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளனர். ஆகவே, உணவு இல்லாமலும், சொந்த ஊருக்குச் செல்ல வழியில்லாமலும் தவித்து வருகிறோம். ஆகவே,அரசு சார்பில் எங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல், திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருவதாகவும், அவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அரசு நிவாரணப் பொருள்களையும், நிதியுதவியும் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com