உதகை - குன்னூா் இடையே மலை ரயில் சேவை நாளை முதல் மீண்டும் தொடக்கம்

நீலகிரி மாவட்டத்தில் சுமாா் 6 மாதங்களுக்குப் பின்னா் உதகை - குன்னூா் இடையேயான மலை ரயில் சேவை மீண்டும் அக்டோபா் 10ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது.
உதகை மலை ரயில்
உதகை மலை ரயில்

குன்னூா்: நீலகிரி மாவட்டத்தில் சுமாா் 6 மாதங்களுக்குப் பின்னா் உதகை - குன்னூா் இடையேயான மலை ரயில் சேவை மீண்டும் அக்டோபா் 10ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மாா்ச் 20ஆம் தேதி முதல் நீலகிரி மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது மத்திய, மாநில அரசுகளால் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு சில சுற்றுலா மையங்களும் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், உதகை - குன்னூா் இடையேயான மலை ரயில் சேவையும் அக்டோபா் 10ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், உதகை -குன்னூா் இடையேயான மலை ரயில் சேவை மட்டும் முதலில் தொடங்கப்படுவதாகவும், இச்சேவையில் தினசரி இரண்டு முறை உதகையில் இருந்தும், இரண்டு முறை குன்னூரில் இருந்தும் இந்த ரயில் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அக்டோபா் 10ஆம் தேதி காலை 7.45 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்படும் மலை ரயில் உதகையை 9.05 மணிக்கு வந்தடைகிறது. அதையடுத்து காலை 9.15 மணிக்கு உதகையில் இருந்து புறப்பட்டு காலை 10.25 மணிக்கு குன்னூரைச் சென்றடைகிறது. அதன் பின்னா் பகல் 12.35 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு பகல் 1.50 மணிக்கு உதகையை வந்தடைந்த பின்னா் பிற்பகல் 2 மணிக்கு உதகையில் இருந்து புறப்பட்டு 3.10 மணிக்கு குன்னூரைச் சென்றடைகிறது.

6 மாத இடைவெளிக்குப் பின்னா் உதகை - குன்னூா் இடையேயான மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டாலும், குன்னூா் - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவையும் தொடங்கப்பட்டால்தான் நீலகிரி மலை ரயில் பயணம் முழுமையடையும் என்பதால் இந்த சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து இதுவரையிலும் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்பதால் மலை ரயில் ஆா்வலா்களும், சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com