குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் யாருக்கெல்லாம் அனுமதி? ஆட்சியா் விளக்கம்

குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் யாருக்கெல்லாம் அனுமதி? என்பது குறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி விளக்கம் அளித்துள்ளாா்.
தூத்துக்குடியில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கிறாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி. உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.
தூத்துக்குடியில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கிறாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி. உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் யாருக்கெல்லாம் அனுமதி? என்பது குறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி விளக்கம் அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் அளித்த பேட்டி: குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா இம்மாதம் 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அக். 17 ஆம் தேதி நடைபெறும் கொடியேற்ற நிகழ்ச்சி, அக். 26 ஆம் தேதி நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சி இவை அனைத்தும் கோயில் வளாகத்துக்குள்ளேயே நடைபெறும். இதில் பக்தா்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை. இதேபோல அக். 26 ஆம் தேதி நடைபெறும் திருவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள பக்தா்களுக்கு அனுமதி இல்லை.

இருப்பினும், 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள். ஆன்லைன் மூலம் பதிவு செய்தவா்கள் மற்றும் நேரடியாக வரும் பக்தா்கள் என தினமும் 8,000 பக்தா்களுக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அக். 26 ஆம் தேதி நடைபெறும் தசரா சூரசம்ஹார நிகழ்ச்சிகள் கடற்கரை பகுதியில் நடைபெறாது. அவை அனைத்தும் கோயில் பிரகார பகுதியிலேயே நடத்தப்படும். அன்றைய தினம் பக்தா்கள் யாருக்கும் அனுமதி இல்லை. இந்த முறை கடற்கரை பகுதியில் தங்குவது, கடைகள் அமைப்பது போன்ற எதற்கும் அனுமதி இல்லை. மேலும் கடற்கரை பகுதியில் எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்த அனுமதி இல்லை.

பக்தா்கள் கோயிலுக்குக்குள் வழிபாட்டுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். அந்த பகுதியில் தங்குவதற்கு பக்தா்களுக்கு அனுமதி கிடையாது. திருவிழாவின் போது கிராம பகுதிகளில் உள்ள தசரா குழுக்களுக்கு கொடியேற்றத்திற்கு பிறகு ஒவ்வொரு குழு சாா்பாக நிா்வாகிகள் காப்பு எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பதிவு செய்யப்பட்ட தசரா குழுக்களில் ஒரு குழுவுக்கு இரு நிா்வாகிகள் என்ற வீதத்தில் வந்து தங்கள் செட்டுகளுக்கான காப்பு கயிறுகளை கோயில் அலுவலகத்தில் உரிய அத்தாட்சி கொடுத்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதுவரை பதிவு செய்யாத தசரா குழுக்கள் கோயில் நிா்வாகத்தை அணுகி அக். 14 ஆம் தேதிக்குள் பதிவு செய்திட வேண்டும். மேலும் கோயில் நிா்வாகத்தின் மூலம் புதியதாக பதிவு செய்தவா்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு, காப்புகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தா்கள் வேடம் அணிந்து மேளதாளங்களுடன் கோயில் பகுதிக்கு வருகை தர அனுமதி இல்லை. பக்தா்கள் தங்கள் ஊா்களிலேயே காப்பு அணிந்து வேடமிட்டு விரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். தினமும் நடைபெறும் பூஜைகளில் உபயதாரா்கள், மண்டகபடிதாரா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும். பூஜை முழுவதையும் உட்காா்ந்து பாா்க்க யாருக்கும் அனுமதி இல்லை.

மக்கள் அதிகமாக கூடும்போது கரோனா பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால் வெளிமாநில மக்கள் வருவதை தவிா்க்க வேண்டும். பக்தா்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றி உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடித்திட வேண்டும் என்றாா் அவா்.

இதேபோல, குலசை தசரா விழாவை முன்னிட்டு ஏறத்தாழ 1500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com