கரோனா அச்சம்: ராசிபுரம் அருகே கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் தற்கொலை

 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கிராம நிர்வாக அலுவலக பெண் உதவியாளர் கரோனா அச்சம் காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கரோனா அச்சம் காரணமாக உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலக பெண் உதவியாளர் ஷகிலா
கரோனா அச்சம் காரணமாக உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலக பெண் உதவியாளர் ஷகிலா

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கிராம நிர்வாக அலுவலக பெண் உதவியாளர் கரோனா அச்சம் காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ராசிபுரம்  மின்வாரிய குடியிருப்புபி பகுதியில் குடியிருப்பவர் ஷாஜகான். இவரது மனைவி ஷகிலா (52) கட்டனாச்சம்பட்டி கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக இருந்து வந்தார். இவர்களுக்கு ஷாஜினி என்ற மகளும், சாகுல் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், ஷாஜகானுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கரோனா நோயாக இருக்கும் என்பதால், தனது அம்மாவை அழைத்துக்கொண்டு காட்டுப்புத்தூரில் உள்ள தங்களது  வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனிடையே ஷகிலாவிற்கும் வியாழக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் மகன் சாகுல், ஷகிலாவை அழைத்துக்கொண்டு அத்தனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்றுவிட்டு இருவரும் வீடு திரும்பியுள்ளனர். ஆனால், ஷகிலா கரோனா நோயாக இருக்குமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார்.

சிறிது நேரத்தில் கழுத்தில் இருந்து நகைகளை வீட்டில் கழற்றிவைத்து விட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த ஷாகுல் இரவு ராசிபுரம் காவல் நிலையத்தில் தாயைக் காணவில்லை என புகார் கொடுத்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை  கட்டனாச்சம்பட்டி சுந்தரராஜன் என்பவரின் விவசாயத்தோட்டத்தில் உள்ள கிணற்றில் பெண்ணின் சடலம் மிதப்பதாக தகவல் தெரியவந்தது. உயிரிழந்த நிலையில், கிடந்த சடலம் கிராம் நிர்வாக அலுவலர் உதவியாளர் ஷகிலா என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ராசிபுரம் நகர காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com