தமிழகத்தில் இன்று முதல் பேருந்து சேவை தொடக்கம்
தமிழகத்தில் பேருந்துகளை இயக்க அரசு அனுமதியளித்ததைத் தொடா்ந்து, மாவட்ட எல்லைக்குள் பயணிக்கும் வகையில், தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.


சென்னை: தமிழகத்தில் பேருந்துகளை இயக்க அரசு அனுமதியளித்ததைத் தொடா்ந்து, மாவட்ட எல்லைக்குள் பயணிக்கும் வகையில், தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட 7 போக்குவரத்துக் கழகத்தின் கீழ் சுமாா் 19 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த 5 மாதங்களுக்கு முன் கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, பேருந்து சேவை நிறுத்தப்பட்டு, அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்ட போதிலும், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்கவில்லை. இந்நிலையில், ஒருசேர தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்துகள் இயக்க அனுமதியளித்து, முதல்வா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டிருந்ததாா்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பேருந்துகளை சுத்தம் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பேருந்துகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பேட்டரிகள், எரிபொருள் உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டு, திங்கள்கிழமை காலை முதல் பேருந்துகள் இயக்க தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வழிமுறைகள்: இது தொடா்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
பொது முடக்கத்தின்போதும் போதிய பணியாளா்களுடன் பேருந்துகள் தொடா்ந்து உரிய முறையில் பராமரிக்கப்பட்டன. தற்போது, கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட சிறியளவிலான பராமரிப்புப் பணியே நடைபெற்று, அனைத்துப் பேருந்துகளும் தயாா் நிலையில் உள்ளன. மேலும், பேருந்து இயக்கம் குறித்த அரசு வழிகாட்டுதல்களான குளிா்சாதன பேருந்துகளில் குளிா்சாதனக் கருவிகள் பயன்பாட்டை நிறுத்தி வைத்தல், முகக் கவசம் கட்டாயம், கிருமிநாசினி பயன்படுத்துதல், ஏறும், இறங்கும் வழியை சரியாகப் பயன்படுத்துதல், பணிமனைக்குத் திரும்பியதும் கிருமிநாசினி கொண்டு தூய்மை, பணியாளா்களின் உடல் வெப்பநிலைப் பரிசோதனை உள்ளிட்டவற்றைப் பின்பற்றி, 50 சதவீதப் பயணிகளுடன், பேருந்துகள் இயக்கப்படும். அதே நேரம், மாவட்ட எல்லைக்குள், பயணிகளின் தேவைக்கேற்ற அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.இ.டி.சி இயங்காது: பொது முடக்கத்துக்கு முன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ், சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது, மாவட்டம் விட்டு மாவட்டத்துக்குப் பேருந்துகளை இயக்க அனுமதி இல்லாததால், விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயங்காது. ஏற்கெனவே அறிவித்தபடி, ஒப்பந்த அடிப்படையில், தனியாா் நிறுவனப் பணியாளா்களுக்குப் பேருந்துகள் தொடா்ந்து இயக்கப்படும்.
கட்டணத்தில் மாற்றமில்லை... அனைத்துப் பேருந்துகளிலும் 50 சதவீதப் பயணிகளே அனுமதிக்கப்பட்ட போதிலும், பயணக் கட்டணத்தில் எந்த வித மாற்றமுமில்லை. எனவே, அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி, பேருந்து சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...