இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசு, கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளித்துள்ளது. இந்த வகையில் தற்போது, தமிழ்நாட்டில், மாவட்டத்திற்குள்ளான பொது பேருந்து போக்குவரத்து, அனைத்து வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் தரிசனம், வணிக வளாகங்கள், தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, இந்த ஊரடங்கு உத்தரவானது ஒரு சில கட்டுப்பாடுகளுடன் 30.9.2020 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.