சென்னை, கோவை, மதுரையில் 4 நாள்கள், சேலம், திருப்பூரில் 3 நாள்கள் முழு ஊரடங்கு

சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 29 வரை நான்கு நாள்களுக்கு முழு  ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் கே.  பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை, கோவை, மதுரையில் 4 நாள்கள், சேலம், திருப்பூரில் 3 நாள்கள் முழு ஊரடங்கு
Updated on
2 min read

சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் ஏப்ரல் 26  முதல் 29 வரை நான்கு நாள்களுக்கும் சேலம், திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ஏப். 26 முதல் 28 வரை மூன்று நாள்களுக்கும் முழு  ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் கே.  பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் புதன்கிழமை இரவு 9 மணி வரையிலும் சேலம், திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ஞாயிறு காலை 6 மணி முதல் செவ்வாய் இரவு 9 மணி வரை இந்த முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் அத்தியாவசியப் பணிகள் தவிர வேறு எந்தப் பணிகளுமே அனுமதிக்கப்பட மாட்டாது என்று முதல்வர் கே. பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு பற்றி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலின் தற்போதைய நிலை குறித்து இன்று (24.4.2020) என்னால் ஆய்வு செய்யப்பட்டது. கிராமப்புறங்களில் இந்த நோய்த் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளபோதிலும், நகரப்புறங்களில், குறிப்பாக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இந்தத் நோய்த் தொற்று தொடர்ந்து பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் அதிக அளவில் இந்த நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால், இது குறித்து மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டதில், நகர்ப்புரங்களில் ஊரடங்கை மேலும் கடுமையாக்கினால் மட்டுமே, இந்த நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

எனவே, தற்போதுள்ள சூழ்நிலைகளையும், மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில மாநகராட்சிகளில் தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த கீழ்க்கண்ட முடிவுகளை அரசு எடுத்துள்ளது.

1. சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளிலும், ஊரடங்கு முழுமையாக 26.4.2020 ஞாயிறு காலை 6 மணி முதல் 29.4.2020 புதன் இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும். 

2. சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக 26.4.2020 ஞாயிறு காலை 6 மணி முதல் 28.4.2020 செவ்வாய் இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும். இந்த ஊரடங்கு காலத்தில் கீழ்க்கண்ட அத்தியாவசியப் பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும்:

1) மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள்.
2) அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.
3) இதர மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படும் 33 சதவீத பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
4) அம்மா உணவகங்கள், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் வழக்கம் போல் செயல்படும்.
5) உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
6) முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.
7) ஆதரவற்றோருக்காக மாவட்ட நிர்வாகங்கள், சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்.
8) ஏழைகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.
9) கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும். அதே போல் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும். மேற்கண்ட நாட்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதி இல்லை.

மேற்கண்ட பணிகளைத் தவிர, பிற பணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது. இதர அரசு அலுவலகங்கள் (பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட) செயல்படாது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம். பிற தனியார் நிறுவனங்கள் செயல்படாது.

மேற்குறிப்பிட்ட மாநகராட்சிகளைத் தவிர பிற இடங்களில்/பகுதிகளில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள்/அனுமதிகள் தொடரும். இக்கால கட்டத்தில் நோய்த்தடுப்பு பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். இப்பகுதிகளில் தினந்தோறும் இருமுறை கிருமி நாசினி தெளிக்கப்படும்.  மாநகரத்தில் பிற பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். இந்தத் தடையை யாரேனும் மீறினால், அவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், தடையை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும், தீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும் நோய் என்பதால், இதை கட்டுப்படுத்த இந்த அரசு எடுத்துவரும்  நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும்  நல்கும்படியும் முதல்வர் பழனிசாமி   கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com