கட்சி தொடங்கப்போவதில்லை: நடிகர் ரஜினி

அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
கட்சி தொடங்கப்போவதில்லை: நடிகர் ரஜினி
கட்சி தொடங்கப்போவதில்லை: நடிகர் ரஜினி


அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

என்னை நம்பி வந்தவர்களை நான் பலிகடா ஆக்கவிரும்பவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும், அது குறித்த அறிவிப்பை டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பேன் என்று கூறியிருந்த நிலையில், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார் நடிகர் ரஜினி.

இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் ஒரு நீண்ட அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில், அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்ற குழுவினர் நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பை நிறுத்தி எனக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ப்பட்டது. ஆனால் எனக்கு நெகடிவ் வந்த போதிலும், ரத்தக் கொதிப்பில் மாறுபாடு ஏற்பட்டது. அவ்வாறு இருப்பது எனது உடல்நிலையை பாதிக்கும் என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. பல பேருக்கு வேலை இழப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அனைத்துக்கும் என் உடல்நிலையே காரணம். 

இதை ஆண்டவன் எனக்குக் கொடுத்த ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கிறேன்.
 

இந்த கரோனா காலத்தில் மக்களை சந்தித்து, பிரசாரத்தின் போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என் கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு, மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.

என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவறமாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமாக என்னைப் பற்றி பேசவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

கடந்த நவம்பர் 30-ம் தேதி நான் உங்களை சந்தித்தபோது, உங்கள் உடல் நலம் தான் எங்களுக்கு முக்கியம், நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதமே என்று சொன்ன வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். அன்புக்கும், பாசத்துக்கும் தலைவணங்குகிறேன். ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும்.

மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில் உங்க உடல் நலத்தை கவனியுங்க, அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய மதிப்பிற்குரிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியிலிருந்து விலகி என் கூட வந்து பணியாற்ற சம்மதித்த மரியாதைக்குரிய அர்ஜூன மூர்த்தி அவர்களுக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.

தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன்.

நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை. 

ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

ரஜினி வெளியிட்டிருக்கும் அறிக்கை..


முன்னதாக, டிசம்பர் 3-ம் தேதி ரஜினி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். வரும் ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சித் தொடங்கப் போவதாகவும், அதற்கான தேதியை டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்க இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். ரஜினி ரசிகர்கள் அனைவரும் அதிகம் எதிர்பார்த்திருந்த அந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று ரஜினி அறிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினி பேசியது: அரசியல் மாற்றமும் ஆட்சி மாற்றமும் அவசியம் தேவை: ரஜினிகாந்த்

ரஜினி தனது சுட்டுரைப் பக்கத்தில் அன்றைய தினம் கூறியிருந்ததாவது, 

ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. 


வரப்போகிற சட்டப்பேரவைத்  தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம்.

அற்புதம்.. அதிசயம்.. நிகழும்!!! என்று பதிவிட்டிருந்தார்.

2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியல் கட்சித் தொடங்கப்போவதாக அறிவித்த ரஜினி, மூன்று ஆண்டுகளுக்குப் பின் இன்று அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்ற அறிவிப்பை தனது நிலைப்பாட்டை பட்டவர்த்தனமாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com