
கரோனா பாதிக்கப்பட்ட புற்றுநோயாளி உள்பட இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் பூரண குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினர்.
கோவை, போத்தனூரை சேர்ந்த 49 வயது ஆண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ஜூன் 9 ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தொண்டையிலிருந்து கட்டி அகற்றப்பட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே இவருக்கு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் திரும்பச் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இருமுறை மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா பாதிப்பில்லை என்ற முடிவுகள் பெறப்பட்டதால் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இவருடன் சேர்த்து இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இரண்டு கர்ப்பிணிகள் உள்பட 11 பேர் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீட்டுக்குத் திரும்பினர். இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வர் நிர்மலா உள்பட மருத்துவர்கள் அனைவரையும் வழியனுப்பி வைத்தனர். தற்போது இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கோவை, திருப்பூர், நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 54 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.