

சென்னை: சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் அதிகமாக இருப்பதால், மே 7-ம் தேதி மதுபானக் கடைகள் திறப்பு இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கரோனா தொற்று பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால், சென்னை பெருநகர் காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மே 7-ம் தேதி மதுபானக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் மதுபானக் கடைகள் மே 7-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,724 ஆக உள்ளது. திருவிக நகர், ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை பகுதிகளில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
தமிழகத்தின் கரோனா அபாயப் பகுதியாக சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மாறியுள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறி சந்தையே மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு இன்று புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு: தமிழக அரசின் நேற்றைய அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் வரும் 7-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. அதேசமயம், மதுக் கடைகளில் உள்ள மது அருந்தும் கூடங்களைத் திறக்க அனுமதியில்லை எனவும் தெரிவித்திருந்தது.
இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தமிழகத்தில் உள்ள மதுபானக் கடைகளை வரும் வியாழக்கிழமை (மே 7) முதல் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனினும், நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளிலுள்ள மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக் கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
காலை 10 முதல் மாலை 5: மதுபானக் கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். ஒரு நபருக்கும், இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி ஆறு அடி தூரமாக பராமரிக்கப்பட வேண்டும். மதுபானக் கடைகளில் ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கக் கூடாது. மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும்.
காரணம் என்ன?: கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு திங்கள்கிழமை (மே 4) முதல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானக் கடைகள் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதி அளித்துள்ளது.
ஆனாலும், மதுபானக் கூடங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. தமிழகத்தை ஒட்டியுள்ள கர்நாடகம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களில் மதுபானக் கடைகளை திறக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தை ஒட்டியுள்ள ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு தமிழக எல்லைப் பகுதியில் உள்ள மக்கள் அதிகளவில் செல்கின்றனர். இதன் காரணமாக, மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழகத்திலும் மதுபானக் கடைகளை வரும் 7-ஆம் தேதி முதல் திறக்க முடிவு செய்துள்ளது என மாநில அரசு தெரிவித்துள்ளது.
எத்தனை நாள்கள் மூடல்
கரோனா நோய்த் தொற்று காரணமாக, கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து மதுபானக் கூடங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால், அரசுக்கு நாளொன்றுக்கு ரூ.100 கோடி வீதம் ரூ.4,200 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருந்தது. வரும் 7-ஆம் தேதி முதல் மதுபானக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால், 43 நாள்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்கு பல டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபான பாட்டில்கள் திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.