
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பரவல் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கம்போல கடைகள் திறக்கப்பட்டு கூட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு தடை மே 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டு இருந்த நிலையில், கரோனா சற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திங்கள்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் முந்தைய நிலையே தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு தடை நீட்டிக்கப்பட்டு இருந்த நிலையில் அத்தியாவசிய கடைகள் தனிக்கடைகள் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட 34 வகையான நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தன. எனினும் விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை அனைத்து வகை கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன. ஏசி பயன்படுத்தாத பெரிய நிறுவனங்களும், கடைகள் திறக்கப்பட்டு இயங்கின. வாகன பணிமனைகள், பழுது நீக்கும் மையங்கள் அதற்கான பொருள்களை விற்பனை செய்யும் கடைகள், பல்வேறு வகையான கடைகள் திறக்கப்பட்டு கரோனாவுக்கு முந்தைய பழைய இயல்பு நிலைக்குக் கூட்டம் திரும்பி இருந்தது.
அரசு அலுவலகங்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வருகை தந்திருந்தனர். இவர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்குவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டன. முக்கிய அரசு அலுவலங்களில் பெரும்பாலான பணியாளர்கள் வந்திருந்தனர். பொது போக்குவரத்து,திரையரங்குகள் தவிர வழக்கமான கடைகள் திறக்கப்பட்டன. இதனால் கூட்டநெரிசல் இயல்பு நிலைக்குத் திரும்பி இருந்தது.