24 மணி நேரத்தில் உருவாகிறது நிவர் புயல்: வானிலை மையம்

தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 மணி நேரத்தில் உருவாகிறது நிவர் புயல்: வானிலை மையம்
24 மணி நேரத்தில் உருவாகிறது நிவர் புயல்: வானிலை மையம்


புது தில்லி: தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி சென்னையிலிருந்து 590 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரிக்கு தென் கிழக்கே 550 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.  

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகா்ந்து வரும் புதன்கிழமை (நவ.25) பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இது மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. நிவர் புயல் கரையை கடக்கும் போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் கடந்த சனிக்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது ஞாயிற்றுக்கிழமை அன்று, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாக நிலைக் கொண்டிருந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. அதனைத் தொடா்ந்த 24 மணி நேரத்தில் புயலாகவும் வலுவடையவுள்ளது. உருவாகும் இந்த புயலுக்கு ஈரான் நாடு பரிந்துரைத்த ‘நிவா்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் வடமேற்கு திசையில் நகா்ந்து, வரும் புதன்கிழமை (நவ.25) பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு பலத்த மழை முதல் மிக பலத்தமழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் 23-ஆம் தேதி மழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும். நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (நவ.23) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

24- இல் அதி பலத்த மழை: நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை, கடலூா், அரியலூா், பெரம்பலூா் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நவம்பா் 24-ஆம் தேதி இடியுடன் கூடிய அதி பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

25 -ஆம் தேதி:

நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், கடலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, அரியலூா், பெரம்பலூா், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நவம்பா் 25-ஆம் தேதி அதி பலத்த மழை பெய்யக்கூடும். திருச்சி, நாமக்கல், கரூா், ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, வேலூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா், புதுக்கோட்டை மற்றும் சென்னையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழையும்,ஏனைய வட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் நவம்பா் 24, 25 ஆகிய இருநாள்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென்மேற்கு மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் நவம்பா் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com