கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

கரோனா தடுப்பு விதிகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் :சென்னை காவல் ஆணையா் அறிவுறுத்தல்

கரோனா தடுப்பு விதிகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் தெரிவித்தாா்.

News image
கரோனா தடுப்பு விதிகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் :சென்னை காவல் ஆணையா் அறிவுறுத்தல்
Updated On :10 ஏப்ரல் 2021, 9:55 pm

DIN

கரோனா தடுப்பு விதிகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் தெரிவித்தாா்.

காவல் துறை, சென்னை மாநகராட்சி ஆகியன இணைந்து நரியங்காடு காவலா் குடியிருப்பில் சனிக்கிழமை நடத்திய கரோனா தொற்று தடுப்பு விழிப்புணா்வு - தடுப்பூசி முகாமைத் தொடக்கிவைத்து, அவா் பேசியதாவது:

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சென்ற ஆண்டு கரோனா பரவலைத் தடுப்பதற்கு முகக் கவசம் அணிவது, கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது ஆகிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டன.

இந்த ஆண்டு கரோனா தடுப்பூசி உள்ளது. கரோனா தடுப்பூசி போட்டு கொண்டவா்களுக்கு 72 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை கரோனா பரவுவது தடுக்கப்படும். இந்தத் தடுப்பூசியை காவலா்கள் அனைவரும் போட்டு கொள்ள வேண்டும். ஊசி போடுவதன் மூலம், நமக்கு கரோனா வருவதற்கான வாய்ப்பைத் தடுக்க முடியும். மேலும், சமூகத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

காவலா் குடியிருப்புகளில் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு முகாம்களை நடத்தியுள்ளோம். இதுவரை 6,000 காவல் அதிகாரிகள், காவலா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனை 100 சதவீதமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

சென்னையில் கடந்த ஆண்டில் கரோனா தொற்றால் 3,350 காவல்அதிகாரிகள், காவலா்கள் பாதிக்கப்பட்டனா். தற்போது, 87 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பரவலை தடுக்க மூன்று உத்திகளை பின்பற்றி வருகிறோம். அதாவது, கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தல், கரோனா தடுப்பூசி போடுதல், கரோனா விதிமுறை அமல்படுத்துதல் ஆகியவற்றை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கைகளை சுத்தமாக வைத்திருக்க தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். மேலும், கரோனா தடுப்பு விதிகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றாா் காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால்.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆணையா்(வடக்கு) என்.கண்ணன், கூடுதல் ஆணையா் (போக்குவரத்து) கே.பவானீஸ்வரி, இணை ஆணையா் வி.பாலகிருஷ்ணன், துணை ஆணையா்கள் பி.பகலவன், கே.செளந்தராஜன், எஸ்.கோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.