பழைய ரூ. 500 நோட்டுகள் மீண்டும் செல்லுமா? சிவன்மலையில் செல்லாத ரூ. 500 நோட்டு வைத்து பூஜை

காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செல்லாத 500 ரூபாய் நோட்டு, பச்சை வேட்டி-துண்டு, வெள்ளைச் சட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பொருள்கள் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது.
காங்கயம் அருகே, சிவன்மலை முருகன் கோயிலில் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் மதிப்பிழந்த 500 ரூபாய் நோட்டு, வேட்டி-சட்டை, துண்டு உள்ளிட்ட பொருள்கள்.
காங்கயம் அருகே, சிவன்மலை முருகன் கோயிலில் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் மதிப்பிழந்த 500 ரூபாய் நோட்டு, வேட்டி-சட்டை, துண்டு உள்ளிட்ட பொருள்கள்.

காங்கயம்: காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை செல்லாத 500 ரூபாய் நோட்டு, பச்சை வேட்டி-துண்டு, வெள்ளைச் சட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பொருள்கள் வைத்து, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணியசுவாமி மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக, சிவன்மலை முருகன் கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்யப்படுவது வழக்கம். பின்னர் அந்தப் பொருளை கோயில் மூலவர் அறைக்கு முன்பாக, கற்தூணில் உள்ள கண்ணாடிப் பேழைக்குள் வைத்து, பக்தர்களின் பார்வைக்கு வைப்பார்கள்.

இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்ற தேர்வு முறை சற்று வித்தியாசமானது. சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்துப் பூஜை செய்ய உத்தரவிடுவதாகக்  கூறப்படுகிறது. இதனால்தான், இது ஆண்டவன் உத்தரவு என்று அழைக்கப்படுகிறது. 

இப்படி, கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் என்று எதுவும் இல்லாமல், இன்னொரு பக்தரின் கனவில் வந்து, அடுத்த பொருளை சுட்டிக் காட்டும் வரையில், பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு, கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்பது இப்பகுதிகளில் உள்ள பக்தர்களின் நம்பிக்கை. இந்தப் பொருள் தேசிய அளவில் ஏற்றமும் பெறலாம், இறங்குமுகம் பெறலாம் என்பதற்கான குறியீடாக, இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் பொருளை இப்பகுதி மக்கள் கவனித்து வருகின்றனர்.

கடைசியாக கடந்த மே மாதம் 18 ஆம் தேதி வேப்பிலை, துளசி உள்ளிட்ட பொருள்கள் வைத்து பூஜை செய்யப்பட்டு, அந்தப் பொருள் வியாழக்கிழமை வரை கண்ணாடிப் பெட்டிக்குள்  வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த எஸ்.கோகுல்ராஜா என்ற பக்தரின் கனவில் வந்ததாக, வெள்ளிக்கிழமை பச்சை நிற வேட்டி-துண்டு, மதிப்பிழந்த 500 ரூபாய் நோட்டுக்கள் இரண்டு, ரூ.5, ரூ.2, ரூ.1 ஆகிய ரூபாய் நோட்டுக்கள் என மொத்தம் ரூ. 1,008 மதிப்பில் பணம், வெள்ளைச் சட்டை, 2 ராசிக் கட்டங்கள், தேங்காய், எலுமிச்சை, வெற்றிலை-பாக்கு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பொருள்கள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர், கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த வேப்பிலை, துளசி நீக்கப்பட்டு, மதிப்பிழந்த 500 ரூபாய் நோட்டு, வேட்டி-சட்டை உள்ளிட்ட பொருள்கள் தற்போது பக்தர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com