கரோனா 3-வது அலையிலிருந்து தப்பிக்க...என்னென்ன செய்ய வேண்டும்?

முதல் அலையைவிட  இரண்டாம் அலையில் கோர தாண்டவம் ஆடிய கரோனா, தனது மூன்றாவது அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது. 
கரோனா 3-வது அலையிலிருந்து தப்பிக்க...என்னென்ன செய்ய வேண்டும்?

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா பெருந்தொற்றின் அலைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. முதல் அலையைவிட  இரண்டாம் அலையில் கோர தாண்டவம் ஆடிய கரோனா, தனது மூன்றாவது அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது. 

இரண்டாவது அலையில் இருந்து மீண்டு தற்போதுதான் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் நிலையில் கரோனா பாதிப்பும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது கரோனா மூன்றாவது அலையின் தொடக்கமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இம்மாத (ஆகஸ்ட்) இறுதியில் கரோனா மூன்றாவது அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று  இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் எச்சரித்துள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தொற்று நோயியல் வல்லுநர் மருத்துவர் சமீரன் பாண்டா, 'முதல் இரு அலைகளில் அதிகம் பாதிக்கப்படாத மாநிலங்கள் கரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடிக்கவில்லை எனில் அந்த மாநிலங்கள் மூன்றாம் அலையில் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்' என்று தெரிவித்திருக்கிறார். 

அதுபோல கரோனா பாதிப்பு விகிதம் 5% க்கும் அதிகமாக உள்ள மாவட்டங்களில் பொதுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று உலக  சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது. தற்போது இந்தியாவில் ஜூலை 30 -ஆகஸ்ட் 5 வரை எடுத்த கணக்கெடுப்பில் கேரளத்தில் 5 மாவட்டங்கள் உள்பட 45 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு விகிதம் 5% க்கும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தற்போது இந்தியாவில் டெல்டா, டெல்டா பிளஸ் வைரஸ்களின் தாக்கம் இருக்கும் நிலையில், மூன்றாவது அலை குழந்தைகளைத்தான் அதிகம் தாக்கும் என்று கூறப்படுவதால் பல்வேறு மாநிலங்களும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஐசிஎம்ஆர் எடுத்த கணக்கெடுப்பில் இந்தியாவில் 65% குழந்தைகள் நோய்எதிர்ப்புத் திறனை கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளது என்றாலும் அனைத்துத் தரப்பினரும் பாதுகாப்பாக இருப்பது அவசியம். 

இந்நிலையில் கரோனா மூன்றாவது அலையில் இருந்து தப்பிக்க மருத்துவ நிபுணர்கள் கூறும் சில வழிமுறைகள்: 

நோய் எதிர்ப்பு சக்தி 

கரோனா பெருந்தொற்றினால் இன்று பலரது உணவுப் பழக்கவழக்க முறைகளும் மாறியுள்ளன. எனினும் கரோனாவின் தாக்கம் தொடர்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளைத் தொடர்ந்து உட்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். 

ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், நல்ல கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகள், வைரஸ் தொற்றில் இருந்து உடலைப்  பாதுகாக்கும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், குர்குமின், குளுதாதியோன், என்-அசிடைல்சிஸ்டீன் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். 

இவை அழற்சியை எதிர்க்கும் தன்மை, வைரஸை எதிர்க்கும் தன்மை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. குறிப்பாக குளுதாதியோன்(glutathione), ஒரு மாஸ்டர் செல்லுலார் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக செயல்படுகிறது. குளுதாதியோன் கேப்சூல்களாகவும், உணவு வகைகளில் ஆப்பிள், பிராக்கோலி, ஆரஞ்சு, கீரைகள், அவோகேடா, தக்காளி, பார்ஸ்லி இலைகள், கேரட், பூண்டு உள்ளிட்டவற்றில் அதிகம் காணப்படுகிறது. 

கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குளுதாதியோன் கொடுக்கப்பட்ட பின்னர் அவர்கள் விரைவாக தொற்றில் இருந்து மீண்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளுதாதியோனிலிருந்து தயாரிக்கப்படும் மினி எஃபெர்சென்ட் மாத்திரைகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

உடற்பயிற்சி 

உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி மனநலத்துக்கும் சிறந்தது. நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. நுரையீரல் செயல்பாடுகள் மேம்பாடு அடைகின்றன. எனவே, அவரவர் வயதுக்கேற்ப உடற்பயிற்சி செய்யுங்கள். வயதானவர்கள் தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இளைஞர்கள் வாரத்திற்கு ஓரிரு முறை தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். காலை அல்லது மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம். 

தடுப்பூசி 

முதல்முதலாக கரோனா தடுப்பூசி போடுவதற்கு மக்கள் அச்சப்பட்ட நிலையில் இன்று வயதானவர்கள், கர்ப்பிணிகள் கூட தடுப்பூசிகள் போட்டுக்கொள்கின்றனர். குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனையும் நிறைவுறும் தருவாயில் உள்ளது. விரைவில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி வந்துவிடும். 

கரோனாவின் அடுத்தடுத்த அலைகளும் வரலாம் என்பதால் தகுதியுள்ளவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று உலக மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கரோனா வருவதைத் தடுக்கும் முன் மருந்தாக தற்போது தடுப்பூசி மட்டுமே பிரதானமாக இருக்கிறது. 

கேரளத்தில் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து கடைக்குச் செல்பவர்கள் கூட தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற விதிமுறை வந்துள்ளது. தடுப்பூசி பற்றாக்குறை இல்லையெனில் விரைவில் மற்ற மாநிலங்களிலும் இம்மாதிரியான விதிமுறைகள் கொண்டுவரப்படலாம். 

முகக்கவசம், சமூக இடைவெளி 

தற்போது மூன்றாவது அலை தொடங்கியுள்ளதாகக் கருதப்படும் நிலையில் பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நெரிசலான இடங்களுக்குச் செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். 

கடந்த ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதுதான் இரண்டாம் அலையின் தீவிரத்திற்கு காரணம் என்று உலக  சுகாதார அமைப்பு கூறியிருந்தது. தற்போது இரண்டாம் அலைக்குப் பின்னதான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இரண்டடுக்கு அல்லது என்95 முகக்கவசம் அணிவதையும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி கழுவுவதையும், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதையும் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.  

கரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் மருத்துவரை அணுகி தேவைப்படின் ஆர்டி-பிசிஆர் சோதனை செய்துகொள்வது சந்தேகத்தைக் குறைக்கும். 

மன அழுத்தம்

தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் முழுவதுமாக மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை. மூன்றாவது அலையின் தாக்கத்திற்கேற்பவே தளர்வுகளும் இருக்கும். கரோனா காலத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மன அழுத்தத்தைக் குறைக்க தியானம், யோகா, இசை, பாடல் கேட்பது, குடும்பத்தினருடன் பேசுவது, ஓவியம் உள்ளிட்ட உங்களுக்குப் பிடித்தமான கலைகளில் கவனம் செலுத்த வேண்டும். நாள் ஒன்றுக்கு குறைந்தது 7-8 மணி நேரம் தூங்குவதும் மன அழுத்தத்தைக் குறைக்கும். 

புகைபிடித்தல், மது அருந்துதல்

புகைக்கும்போது நுரையீரலில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் உருவாவதால் புகையில் உள்ள நச்சுகள் நுரையீரலில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். கரோனா தொற்றும் நுரையீரலைத் தாக்கும் என்பதால் புகைப்பிடித்தலை படிப்படியாக குறைத்துக்கொள்ளுங்கள். மது அருந்துபவர்களுக்கு பலவீனமான கல்லீரல் பலவீனமாவதால் வைரஸ் தொற்றுக்கு எதிராக போரிடும் எதிர்ப்பு சக்தி குறைவாகக் காணப்படும். இதனால் வைரஸ் தொற்றிலிருந்து காத்துக்கொள்ள புகைப்பிடித்தல், மது அருந்துதல் இரண்டும் தவிர்க்கப்பட வேண்டும். 

ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம் 

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் பக்கவாதம் ஆகிய பாதிப்பு உள்ளவர்களுக்கு கரோனா இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இதனால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதுபோல ரத்த அழுத்தத்தையும் சரியாகப் பராமரிக்க சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவுக்குப் பின்னர் சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. 

தற்காப்பு அவசியம்

அடுத்த சில மாதங்களுக்கு மக்கள் கூட்டமான இடங்கள், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்து கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றினால் மூன்றாவது அலையைத் தடுக்கலாம் என்று எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவிக்கிறார். மேலும், உருமாறிய கரோனா வைரஸ்கள் எவ்வாறு செயல்படும் என்று கணிக்க முடியாது, எனினும் வைரஸ்கள் பெரியளவில் இனி உருமாற்றம் அடையாது என்றும் கூறியுள்ளார். 

ஆனால், பல்வேறு மாநிலங்களில் தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் பல இடங்களில் கூட்டம் கூடுவதும்  கரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் அலட்சியம் காட்டுவதும் மூன்றாம் அலையின் அபாயத்தை அதிகரித்துள்ளது. அரசு கட்டுப்பாடுகளை அறிவித்தாலும் தனிப்பட்ட ஒவ்வொருவரும் கரோனா குறித்த விழிப்புணர்வுகள் மூலம் தற்காத்துக்கொள்வதே மூன்றாம் அலையில் இருந்து தப்பிக்க உதவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.